இனி பிறப்பு இறப்பு சான்றிதழ் பெற இது கட்டாயம்..!
பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு தனிப்பட்ட மனிதனின் அனைத்து வகையான பதிவுகளும் அரசிடம் கட்டாயம் பராமரிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். குழந்தைகள் பிறந்தவுடன் மருத்துவமனையிலேயே பிறப்பு சான்றிதழ்களுக்கான பதிவுகள் நடத்தப்பட்டு வழங்கப்படுகிறது. குழந்தையின் பெயரை மட்டும், நாம் பிறப்பு பதிவாளரிடம் சென்று தேவையான ஆவணங்களை அளித்து சேர்த்து கொள்ளலாம். ஒவ்வொரு குடிமகனும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பிறப்பு குறித்த விவரங்களை பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும்.. அதுவும், 14 நாள்களுக்குள் ஒவ்வொரு பிறப்பும் பதிவு செய்யப்பட வேண்டும், தற்போது, பிறப்பு சான்றிதழ், நாட்டின் முக்கிய சேவைகள் அனைத்திற்கும் ஒரே ஆவணமாகியிருக்கிறது..அதே போல் ஒரு நபர் இறந்த பிறகு மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்டு அவருக்கான இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அவர்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ் குறித்து புதிய உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளார். அதன்படி அரசின் நலத்திட்டங்கள் உண்மையான பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்யும் விதமாக சி ஆர் எஸ் அமைப்பின் கீழ் பிறப்பு இறப்பு சான்றிதழை பதிவு செய்யும்போது கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.
பிறப்பு சான்றிதழ் கோரிக்கையின் போது தாய் அல்லது தந்தையின் ஆதார் எண்ணையும், இறப்பு சான்றிதழின் போது உயிரிழந்தவரின் ஆதார் எண்களையும் பதிவேற்ற வேண்டும். கடந்த மாதம் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு விபரங்கள் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகம் முழுதும், மாவட்டங்கள், நகராட்சிகள், ஊராட்சிகள், மருத்துவமனை வாரியாக அனுப்பப்பட்டுள்ளன. அதில் சென்னை உட்பட சில மாவட்டங்களில், மிக குறைந்த விகித ஆதார் எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்குவதுடன், பதிவு நடவடிக்கைகளில் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளதை உறுதிபடுத்த வேண்டும்” என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.