மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் ஜே.பி.நட்டா?
பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தேர்தலுக்கான பணிகளில் பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை என அனைத்து அரசியல் கட்சிகளும் வெற்றி பெறும் முனைப்பில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்திய அளவில் உள்ள முன்னணி அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. மக்களவை, மாநிலங்களவை என இரண்டு அவைகளிலும் உள்ள இடங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அண்மையில் உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி முதற்கட்ட வேட்பாளரை அறிவித்தது.
அந்த கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. நேற்று மற்றொரு பட்டியலை பாஜக வெளியிட்டது. அதன்படி, மத்தியப்பிரதேச மாநிலங்களவை பதவிக்கான வேட்பாளராக மத்திய இணையமைச்சர் எல்.முருகனை பாஜக அறிவித்துள்ளது. இதன்மூலம் 2வது முறையாக அவர் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். அதேபோல், ஒடிசா மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து குஜராத் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளராக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை பாஜக அறிவித்துள்ளது. அதேபோல் அண்மையில் காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்த அசோக் சவான், மகாராஷ்டிரா மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.