சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பெதுத்தேர்வுகள் இன்று தொடக்கம்.. விவசாயிகள் போராட்டத்தால் முக்கிய அறிவிப்பு
ஒவ்வொரு ஆண்டும் மாநில பாடத் திட்டத்தில் நடைபெறும் பொதுத் தேர்வுக்கு முன்னதாகவே, மத்திய மேல்நிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் தொடங்கும்.
இதன்படி, நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் இன்று (பிப்ரவரி 15) தொடங்கி ஏப்ரல் 2ஆம்தேதி வரை நடைபெற உள்ளன
இந்தத் தேர்வில், இந்தியா மற்றும் 26 நாடுகளிலிருந்து 39 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொள்கின்றனர். காலை 10.30 மணிக்கு தேர்வு தொடங்கும் நிலையில், 10 மணிக்குள் மாணவ, மாணவிகள் தேர்வுக் கூடத்துக்கு வர வேண்டும் என சிபிஎஸ்இ அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் காரணமாக, போக்குவரத்தில் பிரச்சினை இருக்கலாம் என்பதால் அதற்கு ஏற்ப, மாணவர்கள் முன்கூட்டியே வீடுகளிலிருந்து புறப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
காலை 10 மணிக்குப் பிறகு தேர்வு அறைக்கு வரும் எந்த மாணவரும் அனுமதிக்கப்பட மாட்டார் என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள்கள் திருத்தப்பட்டு பொதுத்தேர்வு முடிவுகள் மே முதல் வாரம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.