2,486 நகரங்களில் 4,907 வொர்க் ஷாப்… ஒரு மாதத்தில் 2 மில்லியன் வாகனங்களை பழுதுபார்க்கும் மாருதி!

இந்தியாவின் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாகத் திகழும் மாருதி சுசூகி, அதிக பழுதுபார்க்கும் பணிமனைகளையும் கொண்டுள்ளது. இந்த நிலையில், நிறுவனம் தாங்கள் மாதத்திற்கு 20 லட்சம் வாகனங்களை பழுது பார்ப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 2,500 நகரங்களில் 4,900-க்கும் அதிகமான பணிமனைகளை நிறுவனம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவே கடந்த ஏப்ரல், 2023 நிலவரப்படி 2,304 நகரங்களில் 4,564 பணிமனைகளை மாருதி சுசூகி வைத்திருந்தது. ஆனால், பிப்ரவரி 1, 2024 கணக்கின்படி, நாடு முழுவதிலும் 3,330 அரெனா பணிமனைகள், 402 நெக்சா பணிமனைகள் மற்றும் 1,175 மாருதி நிறுவனத்தின் நேரடி பணிமனைகள் உள்பட 2,486 நகரங்களில் மொத்தம் 4,907 பணிமனைகளை நிறுவனம் தன்வசம் கொண்டுள்ளதாக நிறுவனத்தின் மூத்த அலுவலர் ஒரு தகவல் தெரிவித்துள்ளார்.

நகர்புறம் அல்லாத இடங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு உதவ, நெக்சா சர்வீஸ் பணிமனைகளையும் மாருதி அறிமுகம் செய்துள்ளது. தற்போது, ஊட்டி (தமிழ்நாடு), பாங்குரா (மேற்கு வங்கம்), தாஹோத் (குஜராத்), அடேலி (ஹரியானா), சார்க்கி தாத்ரி (ஹரியானா) மற்றும் நிர்மல் (தெலுங்கானா) ஆகிய இடங்களில் இதுபோன்ற ஆறு சேவை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பேசிய மாருதி சேவைக்கான மூத்த நிர்வாக அலுவலர் பார்த்தோ பானர்ஜி, “இந்த நிதியாண்டில் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை 343 சர்வீஸ் டச் பாயின்ட்களைச் சேர்த்துள்ளோம். ஒவ்வொரு நாளும் ஒன்றுக்கும் மேற்பட்ட சர்வீஸ் டச் பாயின்ட்களைத் திறந்து வருகிறோம்.

இந்திய சந்தைகளில் உள்ள மொத்த நெக்சா வாகனங்களில், சுமார் 30 விழுக்காடு நகரங்கள் அல்லாத இடங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் வசம் உள்ளன. வாடிக்கையாளர்களுக்கு பிரீமியம் சேவை அனுபவத்தை வழங்குவதற்காக, சிறிய வடிவிலான நெக்சா சர்வீஸ் பணிமனைகள் என்ற புதிய திட்டத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இது நகரங்களில் உள்ள பெரிய நெக்சா பணிமனைகளில் காணப்படும் அனைத்து சேவைகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்,” என்று அவர் கூறினார். புதிதாகத் திறக்கப்படும் நெக்சா காம்பேக்ட் பணிமனையானது 75 சதுர மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட பரப்பளவைக் கொண்டிருக்கும்.

இதில் நெக்ஸா சர்வீஸ் பணிமனையின் பிரத்யேக முன் அலுவலகம், வாடிக்கையாளர் ஓய்வறை, சேவை அலுவலகம், பார்க்கிங் வசதி போன்றவை இருக்கும். அடுத்த நிதியாண்டு முடிவதற்குள் நாடு முழுவதும் இதுபோன்ற 100 காம்பேக்ட் நெக்சா பணிமனைகளை திறக்க மாருதி ஆயத்தமாகியுள்ளது. வாடிக்கையாளர்கள் அரெனா மற்றும் நெக்சா ஆகிய இரண்டு தரப்பு கார்களின் சேவையை புதிய நெக்சா காம்பேக்ட் சர்வீஸ் ஸ்டேஷன்களில் பெறலாம் என மாருதி தெரிவித்துள்ளது. குறிப்புக்காக, மாருதி அதன் நெக்சா தரப்பில் இருந்து இக்னிஸ், பலேனோ (Baleno), சியாஸ் (Ciaz), ஃபிரான்ஸ் (Fronx), ஜிம்னி (Jimny), கிராண்ட் விடாரா (Grand Vitara), XL6, இன்விக்டோ (Invicto) ஆகிய மாடல் கார்களை விற்பனை செய்கிறது.

அரெனாவில் இருந்து ஆல்ட்டோ கே10 (Alto K10), எஸ்-பிரெஸ்ஸோ (S-Presso), ஈகோ (Eeco), செலெரியோ (Celerio), வேகன் – ஆர் (WagonR), ஸ்விஃப்ட் (Swift), டிசையர் (Dzire), பிரெஸ்ஸா (Brezza), எர்டிகா (Ertiga) ஆகியவற்றை விற்பனை செய்கின்றன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *