அரசியல் கட்சிகளுக்கு நிதியை குவிக்கும் தேர்தல் பத்திர திட்டம் சட்டப்பூர்வமானதா? உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
அரசியல் கட்சியினருக்கு தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் நிதியை அளிக்க தேர்தல் பத்திரங்கள் வகை செய்கின்றன. மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை தேர்தல்களின் போது வெளியிடப்படும் இந்த பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கியின் எந்த கிளையிலும் இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள முடியும். ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு கோடி ரூபாய் வரை தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்படுகின்றன. இந்த தேர்தல் பத்திரங்கள் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளன
தனிநபர்கள், நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். ஒரு நபர், நிறுவனம் எத்தனை பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கலாம். இந்த பத்திரங்களில் வாங்குபவரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இருக்காது. தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
யார் நன்கொடை அளிக்கிறார் என்ற விவரம் வெளியே தெரியாத நிலையில், தேர்தல் பத்திரங்களுக்கு எதிராக பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். விசாரணையின் போது தேர்தல் பத்திரங்களுக்கான கால வரம்பு குறித்துகும் பல்வேறு வாதங்கள் எழுப்பப்பட்டன. இந்த வழக்கின் விசாரணை முடிந்து கடந்த நவம்பர் 2 ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட உள்ளது.