விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வருமா? மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை

விளைபொருள்களுக்கு அடிப்படை ஆதார விலை நிர்ணயம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

சம்யுக்த கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய பிரதான அமைப்புகள் டெல்லியை நோக்கி செல்லும் பேரணிகளை முன்னெடுத்துள்ளனர்.

டெல்லியை நோக்கி வரும் விவசாயிகள் முன்னேற விடாமல் அதிகளவு காவலர்களும், துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமையை போன்று, நேற்றும் ஹரியானா – டெல்லி எல்லையான ஷம்புவில் டிரோன்கள் மூலம் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.

புகைகுண்டுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஈர சாக்குப் பைகளை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், டிரோன்கள் மூலம் புகைகுண்டுகள் வீசப்படுவதை தடுக்க சிலர் எல்லைகளில் அதிகளவு பட்டங்களையும் பறக்க விட்டுள்ளனர்.

விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அர்ஜூன் முண்டா ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் முண்டா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பொதுமக்களின் போக்குவரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் சண்டிகரில் இன்று மாலை 5 மணிக்கு விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது. இதில், மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் அர்ஜுன் முண்டா ஆகியோர் பங்கேற்கின்றனர். இதில் பங்கேற்க போவதாக பஞ்சாப் கிஷான் மஸ்தூர் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாபில் இன்று பகல் 12 மணி முதல் 4 மணி வரை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக மற்றொரு விவசாயிகள் சங்கமான பாரதிய கிசான் யூனியன் அறிவித்துள்ளது. அதேநேரத்தில்

மத்திய அரசை கண்டித்து நாளை நாடு தழுவிய அடைப்புப் போராட்டத்துக்கு சம்யுக்த கிசான் மோர்ச்சா அழைப்பு விடுத்துள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *