ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்தியேன் பட பூஜை… நாயகி, இசையமைப்பாளர் விவரம் இங்கே
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் பூஜை இன்று காதலர் தினத்தை முன்னிட்டு சென்னையில் நடந்தது.
அகிரா, ஸ்பைடர், சர்கார், தர்பார் என முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படங்கள் ரசிகர்களை முழுமையாக கவர தவறிவிட்டன. ரமணா, கஜினி, துப்பாக்கி போன்ற பென்ச் மார்க் படங்கள் எதையும் சமீபத்தில் அவர் தரவில்லை. அதனால், இயக்கத்திற்கு சிறிது இடைவெளி எடுத்துக் கொண்டவர், அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்குவது என தீர்மானித்தார். ஆக்ஷன் அதிரடியாக, கிராபிக்ஸ் தொழில்நுட்பத்துடன் இப்படம் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறின.
சென்ற வருடம் செப்டம்பர் மாதம் முருகதாஸ் – சிவகார்த்திகேயன் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்நிலையில், முருகதாஸ் இந்திப்பட தயாரிப்பாளர் சஜpத் நடியட்வாலாவை பலமுறை சந்தித்து, சல்மான் கானை வைத்து ஒரு படத்தை இயக்குவது குறித்து விவாதித்து வந்தார். சல்மான் கானையும் அவர் சந்தித்தார். இதனால், முருகதாஸ் முதலில் சல்மான் கான் படத்தை இயக்குவாரா இல்லை சிவகார்த்திகேயன் படமா என குழப்பம் நிலவியது.
இந்நிலையில், இன்று சென்னையில் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் பூஜை எளிமையாக நடந்தது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். மிருணாள் தாக்கூர் இதில் நாயகியாக நடிப்பார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், கன்னட நடிகை ருக்மிணி வசந்த் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீ லட்சுமி மூவிஸ் திருப்பதி பிரசாத் படத்தைத் தயாரிக்கிறார்.
பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட இருக்கும் இந்தப் படத்தில் நடிக்க மோகன்லால், வித்யுத் ஜம்வால் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். முருகதாஸின் துப்பாக்கி படத்தில் வித்யுத் ஜம்வால் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயன் இப்போது, கமலின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. அதனை முடித்தபின் அவர் முருகதாஸ் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.