சார்பட்டா பரம்பரை டான்சிங் ரோஸின் சர்ச்சைக்குரிய படம் பெர்த் மார்க்

பிரசவத்தினால் பெண்களுக்கு வயிற்றில் ஏற்படும் தழும்பை குறிக்கும், பெர்த் மார்க் என்ற பெயரில் அறிமுக இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் ஒரு படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீராம் சிவராமன் என்பவரோடு இணைந்து அவரே படத்தை தயாரித்தும் இருக்கிறார். படத்தின் கதை இப்போதே சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது.

இயற்கையோடு இயைந்த வாழ்வு என்று பேசும் பலர் வீட்டில் பிரசவம் பார்ப்பதை ஊக்குவித்து வருகின்றனர். நவீன அலோபதி மருத்துவம் மனிதகுலத்திற்கு எதிரானது என்ற கண்ணோட்டம் கொண்டவர்கள் இவர்கள். இயற்கை பிரசவத்தை மருத்துவமனைகள் தங்களின் பேராசைக் காரணமாக சிசேரியனாக மாற்றுகின்றன என்ற குற்றச்சாட்டையும் இவர்கள் தொடர்ந்து முன்வைக்கிறார்கள். அலோபதி மருத்துவமனைகளின் பெருக்கத்திற்கு முன்பு, பிரசவத்தில் உயிரிழக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததையும், சிசேரியன் சிகிச்சைக்குப்பின் அந்த விகிதம் கணிசமாக குறைந்துள்ளதையும் இவர்கள் வசதியாக மறந்துவிடுகிறார்கள். குறிப்பாக, இந்தியாவில் தமிழ்நாடு, கேரளாவில் பிரசவ இறப்பு விகிதம் மிகமிகக் குறைவு

மக்கள் இப்போது, மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே சுகப்பிரசவம் நடப்பதை விரும்புகிறார்கள், அதனை மையப்படுத்தி பெர்த் மார்க் படத்தை எடுத்திருப்பதாக விக்ரம் ஸ்ரீதரன் கூறியுள்ளார். ராணுவ வீரரான நாயகன் வீடு திரும்புகையில் அவனது மனைவி பிரசவத்துக்கு தயாராக இருக்கிறாள். சுகப்பிரசவத்துக்கு பெயர் போன கிராமம் ஒன்றுக்கு இந்த தம்பதிகள் பிரசவத்துக்காக வருகிறார்கள். அங்கு நடப்பதுதான் பெர்த் மார்க் படத்தின் பிரதான கதை.

இதில் நாயகனாக சார்பட்டா பரம்பரையில் டான்சிங் ரோஸாக அனைவரையும் கவர்ந்த ஷபீர் நடித்துள்ளார். அவரது மனைவியாக பிரசவத்தக்கு தயாராக இருக்கும் மனைவியாக மிர்னா நடித்துள்ளார். மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே மருத்துவம் பார்த்த பல பெண்கள் பிரசவத்தின் போது உயிரிழந்திருக்கும் நிலையில், இப்படியொரு படம் தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதிலளித்துள்ள இயக்குநர், இயற்கை பிரசவத்தை ஊக்குவிக்கும்படியோ, அறுவை சிகச்சை மூலம் நடக்கும் பிரசவத்துக்கு எதிர்ப்பாகவோ இந்தப் படத்தை எடுக்கவில்லை என்றார்.

சமீபத்தில் மலையாளத்தில், சோமன்றெ கிருதாவு என்ற படம் வெளியானது. இயற்கை வாழ்வு, நவீனத்துக்கு எதிரான மனநிலை ஆகியவற்றால் படம் நிறைந்திருந்தது. இதன் நாயகன் மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்து, குழந்தையை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே கல்வி சொல்லிக் கொடுப்பது போல் எடுத்திருந்தனர். படத்தின் பிற அம்சங்கள் சிறப்பாக இருந்தும், வீட்டிலேயே பிரசவம், பள்ளிக்கல்வியை தவிர்ப்பது போன்ற காரணங்களால் நன்றாகப் போக வேண்டிய படம் சுமாரான வரவேற்பையே பெற்றது.

பெர்த் மார்க் திரைப்படம் இந்த மாதம் 23 ம் தேதி வெளியாகிறது. ஜனங்கள் இதற்கு எத்தகைய வரவேற்பை தரப்போகிறார்கள் என்பது அன்று தெரிந்துவிடும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *