IND vs SA 3rd ODI – மரியாதையை காப்பாற்றி கொள்ளுமா சிஎஸ்கே சிங்கம்.. இது தான் கடைசி வாய்ப்பு
இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி வியாழக்கிழமை பார்ல் நகரில் நடைபெறுகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளதால் நாளைய போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் தொடரை கைப்பற்றி விடுவார்கள்.
இந்த நிலையில் இந்திய அணி இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணமாக கருதப்படுபவர் ருதுராஜ் கெய்க்வாட் தான். ஐபிஎல் விஜய் ஹசாரே கோப்பை போன்ற பல்வேறு தொடர்களில் தன்னுடைய திறமையை ருதுராஜ் நிரூபித்திருக்கிறார்.
அண்மையில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் கூட அதிகபட்ச ரன்களை ருதுராஜ் தான் குவித்தார். இதனால் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அவர் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து அவர் வாய்ப்பை வீணடித்து வருகிறார். இதுவரை 6 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வெறும் 115 ரன்கள் தான் ருதுராஜ் கெய்க்வாட் அடித்திருக்கிறார்.
இதில் ஒரே ஒரு முறை 71 ரன்கள் அடித்திருக்கிறார். இது ருதுராஜ் கெய்க்வாட் ஒரு நாள் கிரிக்கெட்டில் எவ்வளவு மோசமாக விளையாடுகிறார் என்பதை காட்டுகிறது. தற்போது நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்கா தொடரில் கூட 5,4 ஆகிய ரன்கள் தான் ருதுராஜ் அடித்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் ருதுராஜ் தன்னுடைய ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இரண்டே இரண்டு முறை தான் இரண்டு இலக்கம் ரன்களை தொட்டு இருக்கிறார்.
மற்றபடி அனைத்துமே ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்து வருகிறார். ருதுராஜ் தொடர்ந்து இதுபோல் மோசமாக விளையாடினால் அவரால் இனி சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் பக்கமே வர முடியாது. ஏற்கனவே சாய் சுதர்சன், கில், இஷான் கிஷன் போன்ற வீரர்கள் எல்லாம் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனை மனதில் வைத்துக் கொண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ருதுராஜ் சதம் அடித்தால் மட்டுமே அவருடைய ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை காப்பாற்றப்படும்.