IND vs ENG : ஜாம்பவான் கையில் கேப் வாங்கிய சர்பராஸ் கான்.. கண்ணீர் விட்டு அழுத தந்தை

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கான் அறிமுகம் ஆனார். அவருக்கு டெஸ்ட் அணி தொப்பியை ஜாம்பவான் அனில் கும்ப்ளே வழங்கினார். அதை கண்ட சர்பராஸ் கான் தந்தை கண்ணீர் விட்டு அழுதார். அந்த காட்சி உருக்கமாக இருந்தது.

அண்டர் 14 காலத்தில் இருந்தே மும்பை மாநில கிரிக்கெட்டில் தன் பெயரை தொடர்ந்து பதித்து வந்தவர் சர்பராஸ் கான். இந்திய அண்டர் 19 அணியில் இடம் பெற்றார். அதன் பின் ரஞ்சி ட்ராபி தொடரில் ரன் வேட்டை நடத்திய அவர் தற்போது கிரிக்கெட் ஆடி வரும் உள்ளூர் வீரர்களில் உலக அளவில் முதல் தர டெஸ்ட் போட்டிகளில் அதிக பேட்டிங் சராசரி (69) வைத்துள்ளார்.

எனினும், அவரது உடல்வாகு மற்றும் அவரது குணம் என ஏதோ ஒன்றை காரணம் காட்டி இந்திய அணியில் தேர்வு செய்யாமல் இருந்தது தேர்வுக் குழு. ஆனால், தற்போது விராட் கோலி, கே எல் ராகுல் போன்ற வீரர்கள் இல்லாத நிலையில், உள்ளூர் போட்டிகளில் மிக அதிக பேட்டிங் சராசரி கொண்ட சர்பராஸ் கான் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார்.

சர்பராஸ் கான் வளர்ச்சியில் அவரது தந்தை நௌஷத் கான் பங்கு மிகவும் அதிகம். கிரிக்கெட் பயிற்சியாளரான நௌஷத் கான், சிறு வயதில் இருந்தே சர்பராஸ் கானை கிரிக்கெட் வீரராக மாற்ற போராடி வருகிறார். இப்போதும் கூட தினமும் தன் தந்தையுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் சர்பராஸ் கான். சுமார் 7 ஆண்டுகளாக ரஞ்சி ட்ராபி தொடரில் சாதித்தும் வாய்ப்பு கிடைக்காமல் வேதனையுடன் இருந்த சர்பராஸ் கான் தந்தை, தன் மகனுக்கு கடும் போராட்டத்துக்கு பின் இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி கண்ணீர் விட்டு அழுதார்.

டெஸ்ட் ஜாம்பவான் ஆன அனில் கும்ப்ளே கையால் டெஸ்ட் தொப்பியை வாங்கினார் சர்பராஸ் கான். அப்போது சர்பராஸ் கான் மனைவியும் அதைக் கண்டு பெருமை கொண்டார். டெஸ்ட் தொப்பியை வாங்கிய சர்பராஸ் கான் அதை தன் தந்தையிடம் கொடுத்தார். அவர் அதற்கு முத்தம் கொடுத்து மீண்டும் கண் கலங்கினார். இந்த காட்சி கிரிக்கெட் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *