IND vs ENG : ஏன்யா இவ்வளவு அவசரம்.. ஈகோவை தொட்ட இங்கிலாந்து.. பொறியில் சிக்கிய ஜெய்ஸ்வால்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்துள்ளார்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஜடேஜா மற்றும் சிராஜ் இருவரும் கம்பேக் கொடுத்த நிலையில், சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜுரெல் இருவரும் அறிமுகம் செய்யப்பட்டனர். அதேபோல் இங்கிலாந்து சோயப் பஷீரை நீக்கிவிட்டு மார்க் வுட்டை கொண்டு செய்தது.
இந்த நிலையில் இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா – யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் முதல் ஓவரை வீச, 2வது ஓவரை மார்க் வுட் வீசினார். கடந்த 2 போட்டிகளிலும் இங்கிலாந்து அணிக்கு ஜெய்ஸ்வால் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தார். அவருக்கு தொடக்கத்திலேயே ஸ்பின்னர்களை கொண்டு வந்ததால், எளிதாக ரன்களை சேர்த்து வேகப்பந்துவீச்சாளரை சமாளித்து ஆடினார்.
அவரை வீழ்த்துவதற்காகவே இங்கிலாந்து அணி 2 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியதாக பார்க்கப்பட்டது. இதனால் ஜெய்ஸ்வால் அதிரடியாக ரன்கள் சேர்க்க முடியாது என்பதோடு, சிறிய பதற்றத்தையும் ஏற்படுத்த முடியும். 2 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியதே ஜெய்ஸ்வாலுக்கு வைக்கப்பட்ட பொறியாகவே பார்க்கப்பட்டது. ஏனென்றால் ஜெய்ஸ்வாலுக்கு எதிரான ஆண்டர்சன், மார்க் வுட் இருவருமே ஆக்ரோஷமாக பந்துவீசினார்கள்.
இந்த நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மார்க் வுட் வீசிய பந்தில் ஜோ ரூட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 22 ரன்களுக்கு முதல் விக்கெடை இழந்தது. அதன்பின் வந்த சுப்மன் கில் டக் அவுட்டாகி வெளியேற, தொடர்ந்து வந்த ரஜத் பட்டிதர் 5 ரன்களில் வெளியேறினார். இதனால் 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறி வருகிறது. அனுபமில்லாத மிடில் ஆர்டரால் இந்திய அணி பின்னடைவை சந்தித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.