தேச ஒற்றுமை பாடலுக்கு தேசிய விருது… புறக்கணித்த வாலி : காரணம் இதுதானா?
தமிழ் சினிமாவில் கண்ணதாசனுக்கு இணையாக பாடல் எழுதி அவருக்கு போட்டியாக மாறிய கவிஞர் வாலி, தான் எழுதிய தேச ஒற்றுமை பாடலுக்கு மத்திய அரசு கொடுத்த தேசிய விருதை நிராகரித்துள்ளார் என்ற தகவல் பலரும் அறியாத ஒன்று.
1973-ம் ஆண்டு ஏ.சி.திரிலோகச்சந்தர் இயக்கத்தில் வெளியான படம் பாரத விலாஸ். அவரே தயாரித்து இயக்கியிருந்த இந்த படத்தில் சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா, மனோரமா, மேஜர் சுந்தர்ராஜன், வி.கே.ராமசாமி, தேவிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்த இந்த படத்திற்கு, அனைத்து பாடல்களையும் கவிஞர் வாலி எழுதியிருந்தார்.
தேச ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில், பாரதவிலாஸ் என்ற வீட்டில் இந்து, முஸ்லீம், கிறிஸ்டின், பஞ்சாபி, என பல மதங்களை பின்பற்றும் குடும்பங்கள் ஒன்றாக ஒற்றுமையுடன் வாழும்போது அவர்களுக்கு நடக்கும் சம்பவங்களை அடிப்பயைாக வைத்து இந்த படத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. அன்றைய காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த படத்தில் பாடல் அனைத்தும் ஹிட்டடித்தது.
குறிப்பாக இந்த படத்தில் வரும், ‘’இந்திய நாடு என் வீடு’’ என்ற பாடல் இன்னும் தேச ஒற்றுமையை வலியுறுத்தும் முக்கிய பாடலாக இருந்து வருகிறது. இன்றைய காலக்கட்டத்திலும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேச ஒன்றுமை பாடலாக இந்த பாடல் ஒலிக்கப்பட்டு வருகிறது. டி.எம்.எஸ், எம்.எஸ்.விஸ்வநாதன், பி.சுசீலா, எல்.ஆ.ஈஸ்வரி, மலேசியா வாசுதேவன், கே.வீரமணி என 6 பாடகர்கள் இணைந்து பாடிய இந்த பாடலில் பல இசைக்கருவிகளை பயன்படுத்தி இசையமைத்திருப்பார் எம்.எஸ்வி.
பாரத விலாஸ் படமும், இந்த பாடலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்த நிலையில், இந்த பாடல் அப்போது இருந்த மத்திய அரசின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த தேச ஒற்றுமை பாடலுக்கு தேசிய விருது கொடுக்க முடிவு செய்த அரசு, இது குறித்து கவிஞர் வாலிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் இந்த பாடலுக்காக உங்களுக்கு விருது கொடுக்க முடிவு செய்துள்ளோம். உங்கள் விபரங்களை அனுப்புங்கள் என்று இருந்துள்ளது.
இந்த கடிதத்தை பார்த்த வாலி, அதை கிழித்து குப்பையில் வீசியுள்ளார். எனக்கு விருது கொடுக்க வேண்டும் என்றால் என்னை பற்றி தெரிந்துகொண்டு கொடுக்கட்டும், நானே என்னை பற்றி எழுதி விருது வாங்கினால் அதில் என்ன மரியாதை இருக்கிறது என்று கூறியுள்ளார். இதை கேட்ட அவருடன் இருந்த நண்பர்கள், நல்ல யோசித்து பாருங்கள் என்று சொல்ல, எனக்கு மக்கள் கொடுக்கும் இந்த விருதே போதும்.
தேசிய விருது கொடுத்தால் அவர்கள் என்னை பற்றி தெரிந்துகொண்டு கொடுக்கட்டும். நானே என்னை பற்றி எழுதி விருது வாங்கினால் அதை நான் காசு கொடுத்து வாங்குவதற்கு சமம். அது விருதுக்கும் மரியாதையாக இருக்காது எனக்கும் மரியாதையாக இருக்காது என்று கூறியுள்ளார் வாலி.