IND vs ENG – பேட்டிங் வரிசையில் ஏன் திடீர் மாற்றம்.. ஜடேஜாவுக்கு ஏன் இந்த புரோமோஷன்? காரணம் என்ன?
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை திடீரென்று மாற்றப்பட்டு இருக்கிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆடுகளத்தை சரியாக பயன்படுத்தி பெரிய ஸ்கோரை குவிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் அதிரடியாக விளையாடுகிறேன் என்ற பெயரில் ஆடுகளத்தை சரியாக கணிக்காமல் இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும், கில் டக்அவுட் ஆகியும் ரஜத் பட்டிதார் ஐந்து ரன்களிலும் வெளியேற இந்திய அணி 33 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்த நிலையில் ரோகித் சர்மாவுடன் அடுத்ததாக அறிமுக வீரராக களம் இறங்கியுள்ள சர்பிராஸ் கான் பேட்டிங் செய்ய வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் திடீரென்று ஜடேஜா களத்திற்கு வந்தார். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சர்பிராஸ் கான் இருக்கும்போது எதற்கு ரவீந்திர ஜடேஜா பேட்டிங்கிற்கு ப்ரோமோஷன் வாங்கி இருக்கிறார் என்று ரசிகர்கள் சந்தேகம் அடைந்தனர்.
இதற்குப் பின்னால் இருக்கும் காரணங்களை தற்போது பார்க்கலாம். வலது கை பேட்ஸ்மனாக ரோகித் சர்மா ஏற்கனவே களத்தில் நிற்கும் போது கில், பட்டிதார் என தொடர்ந்து வலது கை பேட்ஸ்மேன்களே களத்தில் இறங்கினார்கள். இதனால் இங்கிலாந்து அணி வீரர்கள் சுலபமாக பந்து வீசி இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினர். இதனால் இடது கை, வலது கை பேட்ஸ்மேன் களத்தில் இருந்தால் அது இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு லைனை டிஸ்டர்ப் செய்யும்.
மேலும் இடது கை சுழற் பந்துவீச்சாளரான டாம் ஹார்ட்லி பந்துவீசி வருகிறார். அவரை எதிர்கொள்ள வலது கை பேட்ஸ்மேன்களை விட இடது கை பேட்ஸ்மன்களுக்கு சுலபமாக இருக்கும். இதனால் தான் ஜடேஜாவை டிராவிட் நடு வரிசையில் களம் இறக்கி இருக்கிறார். மேலும் இந்திய அணியில் தற்போது நடுவரிசையில் இருக்கும் இளம் வீரர்களுக்கு யாருக்குமே அனுபவம் இல்லை.
இதனால் களத்தில் இரண்டு அனுபவ வீரர்கள் ஒன்றிணைந்து விளையாடி ரன்களை சேர்த்தால் அது அணிக்கு நன்மையை பயக்கும். இதனால் தான் அனுபவ வீரரான ஜடேஜாவை டிராவிட் ப்ரோமோஷன் வழங்கி அனுப்பியிருக்கிறார்.இது எல்லாம் கூடுதல் பிளஸ் ஆக பார்க்கப்பட்டாலும், இதில் மைனஸும் சில இருக்கிறது. தற்போது ஜடேஜாவுக்கு பிறகு களமிறங்க உள்ள பேட்ஸ்மேன்கள் அனைவருமே அனுபவம் இல்லாதவர்கள் தான்.
இதனால் கூடுதலாக கீழ் வரிசையில் ஒரு அனுபவ வீரராக இருந்தால் அது அணிக்கு நன்மையை கொடுத்திருக்கும். மேலும் பேட்டிங் வரிசையில் திடீரென்று மாற்றும்போது அது சர்பிராஸ் கானுக்கு கொஞ்சம் கலக்கத்தை கொடுத்திருக்கலாம். டிராவிட் எடுத்த முடிவு சரியாக அமையுமா இல்லை தவறாக போய் முடியுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.