நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் மறுப்பு? இந்த கட்சிக்கு ஒதுக்கீடு செய்திருப்பதால் சிக்கல்
நாம் தமிழர் கட்சிக்கு கடந்த தேர்தல்களில் பயன்படுத்திய கரும்பு விவசாயி சின்னம் கிடைப்பதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கரும்பு விவசாயி சின்னம்
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு குரல் கொடுத்து அரசியலுக்கு நுழைந்த சீமான், கடந்த 2010 -ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியை ஆரம்பித்தார். பின்னர் அந்த கட்சிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆனார். முதன்முறையாக 2016 -ம் ஆண்டு தேர்தலில் நுழைந்தார்.
அப்போது, 2016 சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் மெழுகுவர்த்தி சின்னத்தில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால், கனிசமான அளவு வாக்குகளை பெற்றது.
பின்பு அடுத்து வந்த, 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால், தற்போது மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் மறுக்கப்பட்டுள்ளது.
என்ன காரணம்?
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய பிரஜா ஐக்யதா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்திருப்பதால், நாம் தமிழர் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்தில் முறையிடவுள்ளதாகவும், அப்படி சின்னம் கிடைக்காத பட்சத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக சாட்டை துரைமுருகன் கூறுகையில், “நாம் தமிழர் கட்சியிடம் இருந்து முழுமையாக கரும்பு விவசாயி சின்னம் பறிபோகவில்லை. அதற்கான வேலைகளில் சட்ட வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஒருவேளை அந்த கட்சிக்கே சின்னத்தை ஒதுக்கீடு செய்வோம் எனக் கூறினால் நீதிமன்றம் சென்று சின்னத்தை பெற முயற்சி செய்வோம்.
தேர்தல் ஆணையம் தந்த அனைத்து விதிகளிலும் நாம் தமிழர் கட்சிதான் பொருந்துகிறது. அந்த கட்சி தேர்தல்களில் போட்டியிடவில்லை. இதனால், நாம் தமிழர் கட்சிக்கே நூறு சதவீதம் கிடைக்க வாய்ப்புள்ளது” என்றார்.