IND vs ENG: இந்திய ஜெர்சியில் சர்பராஸ் கான்.. கண்ணீருடன் தந்தை நெளஷத் கான்.. என்ன சொல்கிறார்?
ராஜ்கோட் : இந்திய அணிக்காக இளம் வீரர் சர்பராஸ் கான் அறிமுகம் செய்யப்படுவதை பார்க்க நீண்ட நேரம் காத்திருந்தீர்களா என்ற கேள்விக்கு அவரது தந்தையும், பயிற்சியாளருமான சர்பராஸ் கான் பதிலளித்துள்ளார்.
இந்திய முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் 69.85 என்ற பேட்டிங் சராசரியில் சர்பராஸ் கானை தவிர்த்து எந்த வீரரும் ரன்களை குவித்ததில்லை. 45 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள சர்பராஸ் கான், 14 சதங்கள் மற்றும் 11 அரைசதங்கள் உட்பட 3,912 ரன்களை விளாசி இருக்கிறார். ரஞ்சி டிராபியில் சாதித்த சர்பராஸ் கானுக்கு கடந்த சில ஆண்டுகளாக இந்திய ஏ அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது.
குறிப்பாக தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணியுடனான போட்டிகளில் சர்பராஸ் கான் பேட்டிங் பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி, கேஎல் ராகுல் உள்ளிட்டோர் விலக, உடனடியாக 2வது டெஸ்ட் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார் சர்பராஸ் கான்.
ஆனால் 2வது டெஸ்ட் போட்டியின் இந்திய பிளேயிங் லெவனில் சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் ராஜ்கோட் மைதானத்தில் தொடங்கியுள்ள 3வது டெஸ்டில் சர்பராஸ் கான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு டெஸ்ட் கேப் வழங்கப்பட்ட தருணத்தை நேரில் கண்டு நெகிழ்ச்சியடைந்த சர்பராஸ் கான் தந்தை நெளஷத் கான், ஆனந்த கண்ணீரில் இருந்தார்.
சர்பராஸ் கான் கொண்டு வந்த டெஸ்ட் கேப்பிற்கு முத்தம் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த பார்த்த இந்திய ரசிகர்களும் எமோஷனலாக காணப்பட்டனர். இதனிடையே சர்பராஸ் கானின் அறிமுகம் சில ஆண்டுகளுக்கு முன்னதாக நடந்திருக்க வேண்டும் என்று ரசிகர்களிடையே விவாதங்கள் எழுந்தன. 26 வயதாகும் சர்பராஸ் கான் நீண்ட நாட்களாக உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் சர்பராஸ் கான் அறிமுகத்திற்கு பின் அவரது தந்தை நெளஷத் கானிடம் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, இந்திய அணியில் சர்பராஸ் கான் அறிமுகத்தை காண்பதற்காக நீண்ட நேரமாக காத்திருந்தீர்களா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு நெளஷத் கான், வாழ்க்கையில் இரவை கடக்க நீண்ட நேரம் எடுக்கும். நாம் நினைக்கும் நேரங்களில் சூரியன் உதிப்பதில்லையே என்று தத்துவத்தை பதிலாக அளித்தார். இது ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.