டீமை விட்டு கிளம்புங்க.. அவசர அவசரமாக முகேஷ் குமாரை அனுப்பிய பிசிசிஐ.. அதிரடி முடிவு
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய வேகப் பந்துவீச்சாளர் முகேஷ் குமார் நீக்கப்பட்ட நிலையில், அவரை உடனடியாக மேற்கு வங்கத்துக்கு செல்லுமாறு பிசிசிஐ கூறி இருக்கிறது.
டெஸ்ட் தொடருக்கான உத்தேச அணியில் இருந்து அவரை விடுவித்து இருக்கிறது பிசிசிஐ.
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் முகேஷ் குமார் உத்தேச அணியில் கூட இடம் பெறவில்லை. முதல் போட்டியில் முகமது சிராஜ் மற்றும் பும்ரா வேகப் பந்துவீச்சாளர்களாக இடம் பெற்றனர். சிராஜ் முதல் போட்டியில் விக்கெட் வீழ்த்தாத நிலையில் அவருக்கு இரண்டாவது டெஸ்ட்டில் ஓய்வு அளிக்கப்பட்டு, முகேஷ் குமார் இரண்டாவது டெஸ்ட்டுக்கு முன் அணியில் இணைந்து, அந்தப் போட்டியிலும் ஆடினார்.
இரண்டாவது டெஸ்ட்டில் முகேஷ் குமார் 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். இதை அடுத்து அவரை மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன் அணியில் இருந்து நீக்கிய பிசிசிஐ நான்காவது டெஸ்ட் போட்டியின் போது அணியில் வந்து சேருமாறு கூறி உள்ளது. இடைப்பட்ட ஒரு வாரத்தில் ஓய்வு எடுக்காமல், ரஞ்சி ட்ராபி தொடரில் ஆடுமாறு அவருக்கு கூறப்பட்டுள்ளது. எனவே, மூன்றாவது டெஸ்ட் துவங்கும் முன்பே முகேஷ் குமார் மேற்கு வங்கத்துக்கு விரைந்தார். அங்கே நாளை துவங்க உள்ள பீகார் அணிக்கு எதிரான போட்டியில் மேற்கு வங்க அணியில் இணைந்து ஆட உள்ளார்.
மறுபுறம், கடந்த போட்டியில் ஓய்வில் இருந்த முகமது சிராஜ், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அணியில் இணைந்து இருக்கிறார். இப்படி வேகப் பந்துவீச்சாளர்களை பிசிசிஐ பந்தாடி வருவது சரியான அணுகுமுறையா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கி உள்ள இந்திய அணி :
ரோஹித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரஜத் படிதார், சர்பராஸ் கான், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜுரேல், அஸ்வின், பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்