ஜடேஜா செய்த செயல்.. அதிர்ந்து போன சர்பராஸ் கான்.. கொந்தளித்த ரசிகர்கள்.. அப்செட்டான கேப்டன்
தன் முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக ஆடி வந்த சர்பராஸ் கான் அரைசதம் அடித்த நிலையில், ரவீந்திர ஜடேஜாவின் சுயநலத்தால் ரன் அவுட் ஆனார். அதைக் கண்ட ரசிகர்கள் சமூக ஊடகத்தில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கான் அறிமுகம் ஆனார். இந்திய அணி இந்தப் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்தது. 33 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் ரோஹித் சர்மா – ரவீந்திர ஜடேஜா இணைந்து அணியை மீட்டனர். ரோஹித் சர்மா 131 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து ரவீந்திர ஜடேஜா – சர்பராஸ் கான் இணைந்தனர். முதல் போட்டி என்ற எந்த தயக்கமும், பயமும் இன்றி சரமாரியாக அடித்து ஆடினார் சர்பராஸ் கான். 48 பந்துகளில் எல்லாம் அரைசதம் கடந்து இங்கிலாந்து அணியை பதற வைத்தார். அவர் 62 ரன்கள் எடுத்த நிலையில், ஜடேஜா 99 ரன்களுடன் சதத்தை நிறைவு செய்ய காத்திருந்தார்.
அப்போது ஆண்டர்சன் ஓவரில் பந்தை தட்டி விட்டு ஜடேஜா இரண்டு அடி முன்னே வந்தார். எதிரில் இருந்த சர்பராஸ் கான் ஜடேஜா ஓடி வந்ததை பார்த்து தானும் வேகமாக ஓடத் துவங்கினார். ஆனால், அதற்குள் இங்கிலாந்து வீரர் மார்க் உட் பந்தை எடுத்து விட்டதை பார்த்த ஜடேஜா, ரன் வேண்டாம் என திரும்பினார். தான் சதம் அடிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்த ஜடேஜா சுயநலமாக இப்படி செய்தார். அதை எதிர்பாராத சர்பராஸ் கான் மீண்டும் தன் இடத்துக்கு ஓடி வருவதற்குள் மார்க் உட் நேராக ஸ்டம்ப்பில் அடித்து ரன் அவுட் செய்தார்.
இதை அடுத்து சர்பராஸ் கான் அதிர்ச்சியுடன் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். கேப்டன் ரோஹித் சர்மா வீரர்கள் அறையில் இந்த சம்பவத்தை கண்டு கடும் கோபம் கொண்டார். கடுமையான வார்த்தைகளில் திட்டிக் கொண்டு இருந்தார். ரசிகர்களும் சமூக ஊடகங்களில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். சர்பராஸ் கான் ரன் அவுட் ஆன பின், அதற்கு அடுத்த பந்தில் ஜடேஜா சதம் கடந்தார். ஆனால், ரசிகர்கள் அதை கொண்டாடவில்லை. மாறாக இப்படி ஒரு சுயநலமான சதம் தேவையே இல்லை என அவரை வறுத்து எடுத்தனர்.