ஜப்பான் நாட்டில் ரெசிஷன்.. ஒரே நாளில் 2 அதிர்ச்சி செய்தி..!
உலகின் முன்னணி பொருளாதார நாடுகள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையில், ஜப்பான் நாட்டின் ஜிடிபி-யில் ஏற்பட்ட தடுமாற்றத்தால் அந்நாடு ரெசிஷனுக்குள் தள்ளப்பட்டு உள்ளது. ஏற்கனவே சர்வதேச முதலீட்டுச் சந்தை பணவீக்கம், போர் ஆகியவற்றின் காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜப்பான் ரெசிஷன் செய்தி கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் பொருளாதாரம் தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக ஜிடிபி வளர்ச்சியில் சரிவை எதிர்கொண்டு வரும் வேளையில் தற்போது ரெசிஷனுக்குள் மாட்டிக்கொண்டு உள்ளது. இந்த மேசமான நிலைக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுவது, ஜப்பானில் உள்நாட்டுத் தேவையில் ஏற்பட்ட பெரிய அளவிலான சரிவு தான்.
இந்த நிலையில் ஜப்பான் மத்திய வங்கி தனது மிகவும் தளர்வான நாணய கொள்கை திட்டத்தில் இருந்து பின்வாங்கும் முடிவில் முட்டுக்கட்டை போட்டு உள்ளது. ஜிடிபி வளர்ச்சிப் பாதையில் கொண்டு வர கட்டாயம் தளர்வான நாணய கொள்கை அவசியமாகியுள்ளது. இந்தியாவைப் போல் அல்லாமல் ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவை மிகவும் குறைந்த வட்டி விகிதத்தைக் கொண்டு உள்ளது.
பொதுவாக 2 காலாண்டுகளாக ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சரிவு பாதையில் இருந்தால் ரெசிஷன் எனக் கூறப்படும். கடந்த 3 ஆண்டில் உலகில் பிரிட்டன் உட்படப் பல நாடுகள் இந்த மோசமான நிலையை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஜப்பான் முதலீட்டாளர்களுக்கும், ஜப்பான் மக்களுக்கும் தங்களுடைய நாடு ரெசிஷனுக்குள் நுழைந்துள்ளது முதல் அதிர்ச்சியாக இருக்கும் வேளையில், ஜெர்மனியிடம் தனது இடத்தை இழந்துள்ளது இரண்டாவது பாதிப்பாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக இருந்த ஜப்பான் தற்போது 4வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளது. இதன் மூலம் 4வது இடத்தில் இருந்த ஜெர்மனி 3வது இடத்திற்கு உயர்ந்துள்ளது, ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டும் என்ற கருத்து வெளியான சில நாளில் 3வது இடத்திற்கு வந்துள்ளது.
ஜப்பான் பொருளாதாரம் செப்டம்பர் காலாண்டில் 3.3 சதவீதமாகக் குறைந்திருக்கும் வேளையில், டிசம்பர் காலாண்டில் 0.4 சதவீதமாகச் சரிந்துள்ளது. இதேவேளையில் ஜப்பான் யென் மதிப்பு ஒரு வாரத்திற்கு முன்பு 3 மாத சரிவை தொட்டது குறிப்பிடத்தக்கது.