இவர்தான் அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டும்: புடின் விருப்பம்…
ட்ரம்ப் அல்ல, ஜோ பைடன் அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதுதான் தன் விருப்பம் என்று கூறியுள்ளார் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்.
காரணம் என்ன?
நேற்று ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த புடின், ஜோ பைடன் அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதுதான் தன் விருப்பம் என்று கூறியுள்ளார். காரணம், ஜோ பைடன் அதிக அனுபவம் வாய்ந்தவர், கணிக்கத்தக்கவர் என்று கூறினார் புடின். என்றாலும், அமெரிக்க மக்கள் நம்பும் எந்த தலைவருடனும் பணி புரிய ரஷ்யா தயாராக உள்ளது என்றார் அவர்.
ரஷ்யாவின் கண்ணோட்டத்தில், தான் ஜோ பைடன் ஜனாதிபதியாவதற்கே முன்னுரிமை கொடுப்பதாகவும் தெரிவித்தார் புடின்.
ஜோ பைடனின் மோசமாகும் உடல் நிலை குறித்து…
புடினிடம், ஜோ பைடனின் உடல் நிலை மோசமாகிவருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த புடின், அமெரிக்காவில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கும் நேரத்தில் இப்படிப்பட்ட செய்திகளும் அதிகமாக பரவி வருகின்றன என்றார்.
நான் ஒரு மருத்துவர் அல்ல, ஜோ பைடனின் உடல் நலம் குறித்து நான் கருத்து தெரிவிப்பது முறையாக இருக்காது என்று நான் கருதுகிறேன் என்று கூறிய புடின், நான் 2021ஆம் ஆண்டு, ஜூன் மாதம், ஜோ பைடனை சுவிட்சர்லாந்தில் சந்தித்த நேரத்திலும் அவரது உடல் நலம் குறித்த செய்திகள் பரவிவந்தன. ஆனால், நான் அவரை சந்திக்கும்போது அவர் நல்ல நிலையில் இருந்தார்.
அவர் வலிமையற்றவராக, எதையும் செய்ய இயலாத நிலையில் இருந்ததாக பேசப்பட்டது. ஆனால், நான் அப்படி எதையும் பார்க்கவில்லை. அவர், அவர் கையிலிருந்த ஆவணங்களை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார், உண்மையாகச் சொன்னால், அப்போது நானும் என் கையிலிருந்த ஆவணங்களை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தேன் என்று கூறியுள்ளார் புடின்.