அமெரிக்காவில் மீண்டும் ஒரு இந்திய வம்சாவளியினர் கொலை: இந்தியர்களுக்கெதிராக அதிகரிக்கும் தாக்குதல்கள்
அமெரிக்காவில், இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், வயது முதிர்ந்த இந்திய வம்சாவளியினர் ஒருவர் கடந்த வாரம் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
அநியாயமாக சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய வம்சாவளியினர்
2024ஆம் ஆண்டு துவங்கி இதுவரை 7 இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவில் கொல்லப்பட்டுள்ளார்கள்.
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்திலுள்ள Sheffield என்னுமிடத்தில், Hillcrest Motel என்னும் தங்கும் விடுதியை நடத்தி வந்தவர் பிரவீன் ராவோஜிபாய் படேல் (76).
கடந்த வியாழக்கிழமை, அதாவது, பிப்ரவரி 8ஆம் திகதி, வில்லியம் ஜெரமி மூர் (34) என்பவர் தங்கும் விடுதியில் அறை ஒன்றை வாடகைக்கு கேட்க வந்துள்ளார். அப்போது, அவருக்கும் படேலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக துப்பாக்கியை எடுத்து படேலை சுட்டுள்ளார் வில்லியம்.
படேல் இரத்த வெள்ளத்தில் கிடக்க, வில்லியம் தப்பியோடி அருகிலிருந்த ஆளில்லா வீடு ஒன்றிற்குள் நுழைய முயலும்போது பொலிசார் அவரை மடக்கிப் பிடித்துள்ளனர். அவரை சோதனையிட்டபோது, அவரிடம் படேலை சுட்ட துப்பாக்கி இருந்துள்ளது. வில்லியம் தற்போது பொலிஸ் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை Tuscumbia என்னுமிடத்திலுள்ள இறுதிச்சடங்கு மையத்தில் படேலுக்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது.
இந்தியர்களுக்கெதிராக அதிகரிக்கும் தாக்குதல்கள்
அமெரிக்காவில் இந்தியர்களுக்கெதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. முதலில் மோசமான விமர்சனங்களுக்கு ஆளான இந்தியர்கள், பின்னர் தாக்குதலுக்குள்ளானார்கள்.
தற்போது, கொலை செய்யப்படும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.
இண்டியானாவிலுள்ள Purdue பல்கலைக்கழகத்தில் நீல் ஆச்சார்யா என்னும் இந்திய மாணவர், விவேக் சைனி என்னும் இந்திய இளைஞர், Ohio மாகாணத்தில், ஷ்ரியாஸ் ரெட்டி என்னும் இந்திய வம்சாவளி மாணவர், இல்லினாயிஸ் பல்கலைக்கு வெளியே அகுல் தவான் என்னும் இந்திய மாணவர், ஒரே அறையில் தங்கியிருந்த தினேஷ், நிகேஷ் என்னும் இந்திய மாணவர்கள், வாஷிங்டனில் விவேக் தெனேஜா என்னும் என்னும் இந்தியர் என இதுவரை ஏழு இந்தியர்கள் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது படேல் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.