பிரித்தானியாவில் முகமூடி நபர்களால் 16 வயது சிறுவனுக்கு நேர்ந்த பயங்கரம்
பிரித்தானியாவில் பூங்கா ஒன்றில் 16 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
16 வயது சிறுவன்
பிரிஸ்டோல் நகரில் உள்ள பூங்கா ஒன்றில், நேற்று மாலை 16 வயது சிறுவன் பலத்த காயத்துடன் காணப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து ஆம்புலன்ஸ் விரைந்து வந்து சிறுவனை மீட்டனர்.
அப்போது பொலிஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் கத்தியால் குத்தப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில், முகமூடி அணிந்த இருவர் சிறுவனை தாக்கியதாகவும், பின் கத்தியால் குத்தியதாகவும் தெரிய வந்தது.
மேயர் இரங்கல்
இந்த நிலையில், குற்றவாளிகளை அடையாளம் காண துப்பறியும் நபர்கள் தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பிரேத பரிசோதனை நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் பிரிஸ்டோலில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அந்நகரின் மேயர் Marvin Rees இதுகுறித்து கூறுகையில், ‘பாதிக்கப்பட்டவரின் குடும்பம் என்ன அனுபவிக்கிறது என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. என் எண்ணங்கள் அவர்களுடன் உள்ளன. இதை நிறுத்த வேண்டும். இந்த நேரத்தில் குடும்பம், காவல்துறை மற்றும் உள்ளூர் சமூகத்திற்கு ஆதரவளிக்க நாங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம்’ என தெரிவித்துள்ளார்.