மாணவர் விசா விதிகள்… கனடாவை அடுத்து இந்திய மாணவர்களால் நெருக்கடியை சந்திக்கும் பிரித்தானியா
பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவு சரிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய மாணவர்களை இழக்கும் நிலை
கனடா மற்றும் இந்தியாவுக்கான உறவில் விரிசல் கண்டதை அடுத்து, இந்திய மாணவர்கள் பெருமளவில் கனேடிய பல்கலைக்கழகங்களை தெரிவு செய்வதை தவிர்த்த நிலையில், தற்போது ரிஷி சுனக் அரசாங்கத்தின் புதிய மாணவர் விசா விதிகளால், பிரித்தானியாவும் இந்திய மாணவர்களை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
படிப்புக்குப் பிந்தைய பணி விசாவிற்கென முன்னெடுக்கப்படும் மதிப்பாய்வு மற்றும் அரசு நிதியுதவி பெறும் மாணவர்கள் தங்களை சார்ந்திருப்பவர்களை அழைத்து வருவதற்கான கட்டுப்பாடுகள் காரணமாகவும் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
வெளியான தரவுகளின் அடிப்படையில், 4 சதவிகித வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் UCAS எனப்படும் அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளில், இளங்கலை இடங்களுக்கான சர்வதேச மாணவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 0.7 சதவீதம் அதிகரித்துள்ளது என்றே கூறப்படுகிறது.
மேலும், நைஜீரியா மற்றும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை சமீப காலங்களில் சாதனை உயர்வுக்குப் பிறகு தற்போது சரிவடைந்து காணப்படுவதாக தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் இருந்து 4 சதவீதம்
இந்தியாவில் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது 4 சதவீதம் சரிவடைந்து 8,770 எனவும், நைஜீரியாவில் இருந்து 46 சதவீதம் குறைந்து 1,590 எனவும் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில் பிரித்தானியாவின் உயர்கல்வி முறை உலகளவில் கவனம் பெற்றுள்ளது, சர்வதேச விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 0.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
சீனாவில் இருந்து 3 சதவீதம் அதிகரித்து, விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 910 என பதிவாகியுள்ளது. துருக்கியில் இருந்து 37 சதவீதம் அதிகரித்து, விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 710 என பதிவாகியுள்ளது.
கனடாவில் இருந்து 14 சதவீதம் அதிகரித்து, விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 340 என பதிவாகியுள்ளது. ஆனால் நைஜீரியாவில் இருந்து 46 சதவீதம் சரிவடைந்துள்ளதாகவும், இந்தியாவில் இருந்து 4 சதவீதம் சரிவடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.