சிறப்பு உதவி ஆய்வாளர் சாலை விபத்தில் உயிரிழப்பு – முதல்வர் ஸ்டாலின் நிவாரண நிதி அறிவிப்பு..!
தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் :கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை போக்குவரத்துப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்துவரும் திரு.ஜஸ்டின் (வயது 53) த/பெ. ஜோசப்பின் என்பவர் இன்று (15.2.2024) பிற்பகல் பணி நிமித்தமாக இருசக்கர வாகனத்தில் நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை, இரணியல் காவல் சரகம், அக்கினியானா குளம் அருகில் சென்றுகொண்டிருந்தபோது அவர் மேல் லாரி மோதி உள்ளது.
எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த இந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்த ஜஸ்டின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
பணியின் நிமித்தமாக சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட சாலை விபத்தில் போக்குவரத்துச் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.ஜஸ்டின் அவர்கள் உயிரிழந்துள்ளது காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.
போக்குவரத்துச் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.ஜஸ்டின் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.