இன்று இப்படி செய்வதால் நம் பாவங்கள் விலகி புண்ணிய பலன்கள் பெருகும்..!
ரதசப்தமி நாளில் சூரியன் பிறந்ததாகக் கருதப்படுவதாலும், அந்த நாளில் சூரியனுக்கு விசேஷமான ஒளிபிறப்பதாலும், அன்றைய தினத்தில் விரதம் கடைப்பிடித்து சூரிய பகவானை வழிபட வேண்டும். சூரிய உதயத்திற்குமுன் எழுந்து காலைக்கடன்களை முடித்துக்கொண்டு ஆண்கள் சூரியனுக்குப் பிடித்த எருக்கன் இலைகள் ஏழு எடுத்து அத்துடன் அட்சதையும் (சிறிதளவு பச்சரிசி) விபூதியையும் தலையின்மீது வைத்துக்கொண்டு கிழக்கு திசை நோக்கி நீராட வேண்டும். பெண்கள் (கன்னி மற்றும் சுமங்கலிகள்) ஏழு எருக்கன் இலைகள் மேல் சிறிதளடு மஞ்சள் தூளையும் அட்சதையையும் வைத்துக்கொண்டு நீராட வேண்டும். சூரியனின் ஏழு வகையான கிரணங்கள் எருக்கன் இலைகள் மூலமாக உடலில் பாய்ந்து உடல்நலத்தை வலுப்படுத்தும் என்பது ஐதீகம். அதற்குப்பின் சூரிய நமஸ்காரம் அவசியம் செய்யவேண்டும். அப்போது அர்க்ய மந்திரம் சொல்லி நீர்விட வேண்டும். வேதம் அறிந்த விற்பன்னர்களிடம் உபதேசம் பெற்று மந்திரத்தை அறிந்துகொள்வது நலன் தரும்.
ஆயுள், ஆரோக்யம் தரும் விரதங்கள் ஆண்டில் பல வந்தாலும் அனைத்திலும் சிறந்ததாகச் சொல்லப்படுவது ரத சப்தமி விரதமே. தெற்குப் பாதையில் பயணிக்கும் சூரியன், அன்றுமுதல் வடக்கு வழியில் திசை திரும்பிப் பயணிப்பதாக ஜோதிட புராண நூல்கள் சொல்கின்றன. அதாவது அன்றுதான் தட்சிணாயன காலம் முடிந்து உத்தராயண காலம் ஆரம்பமாகிறது. அன்று சூரிய உதய நேரத்தில் எழுந்து ஆறு, ஏரி அல்லது குளத்தில் நீராடச் செல்வது சிறப்பு. இயலாதவர்கள் அவரவர் இல்லத்தில் சிறிதளவாவது சூரிய ஒளிபடும் இடத்தில் நீராடலாம்.
நீராடும்போது, ஏழு எருக்கிலைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி, அவற்றின் மீது சிறிது அரிசி, மஞ்சள் ஆகியவற்றை வைத்து அதனை அப்படியே உச்சந் தலையில் வைத்துக் கொண்டு நீரில் மூழ்கி எழவேண்டும். வீட்டில் நீராடும் போது அவற்றைத் தலையில் வைத்துக் கொண்டபின், தண்ணீர் ஊற்றிக்கொண்டு குளிக்கலாம். இப்படிச் செய்வதால் நம் பாவங்கள் விலகி பகலவனைக் கண்டு பனி மறைவது போல மறைந்து போகும். புண்ணிய பலன்கள் பெருகும் என்பது ஐதிகம்.
அன்றைய தினம் குளித்து முடித்தபின் சூரியனை நமஸ்கரிக்க வேண்டும். அதன் பின் தெரிந்த சூரிய துதிகளைச் சொல்ல வேண்டும். எந்த தெய்வத்தை வழிபடுகிறோமோ அந்த தெய்வத்தின் திருக்கரங்களில் நீர் வார்ப்பது போன்ற அர்க்கியம் விடுவது. எனவே ரத சப்தமியன்று சூரியனுக்கு அர்க்கியம் விடுவது முக்கியத்துவம் உடையது. சூரியனுக்கு உகந்த நிவேதனம் சர்க்கரைப் பொங்கல். பொங்கல் வைத்து அது சூடு ஆறும் முன்பாக நைவேத்தியம் செய்துவிட வேண்டும். சூரியனுக்குப் படைத்த சர்க்கரை பொங்கலை பிறருக்கு விநியோகிப்பது சிறப்பான பலன் தரும். ரத சப்தமி நாளில் வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் தேர்க் கோலம் போடுவது பலரது வழக்கம். இந்தக் கோலத்தினை வீட்டு வாசலில் போட்டு, அதன் வடமாக ஒரு கோட்டினை தெருவரை நீளும்படி வரைவதும் உண்டு.
நாராயணனின் அம்சமே சூரியன் என்பதால் ரதசப்தமி நாளில் பெருமாள் ஆலயங்களில் சூரிய பிரபையில் எம்பிரான் எழுந்தருள்வார். அன்றைய தினம் விரதம் இருப்பது நீடித்த ஆயுளும், குறையாத ஆரோக்யமும் அளிக்கும் என்பது நம்பிக்கை. இவ்விரதம் இருப்பது சுமங்கலித்துவம் நிலைக்கச் செய்யும் எனவும் சிலர் கூறுவர். பார்வைக்குத் தெரியும் பகவானை பகலவனை ரதசப்தமி தினத்தில் வழிபடும்போது சூரியனை நோக்கி, ஓம் நமோ ஆதித்யாய.. ஆயுள், ஆரோக்யம், புத்திர் பலம் தேஹிமே சதா! என்று சொல்லி வணங்கலாம். அறிவு, ஆற்றல், ஆரோக்யம், ஆயுள் என யாவற்றிலும் சிறந்து விளங்கும் அனுமனுக்கு அந்த ஆற்றலை குருவாக இருந்து அளித்தவர் சூரியன். ஆதவனை வழிபடுவோர் வாழ்வில் தீவினை இருள் விலகி நன்மை ஒளி பரவும் என்பது நிச்சயம்!