“விளையாட்டு வினையானது”… சிங்கத்துடன் செல்ஃபி எடுத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
திருப்பதி மலையடிவாரத்தில் ஸ்ரீவெங்கடேஸ்வரா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கானுயிர்களில் 3 சிங்கங்களும் அடங்கும். அவற்றில் ஒன்றுடன் செல்ஃபி எடுக்க விரும்பிய நபர், சிங்கத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் பகுதியைச் சேர்ந்தவர் பிரகலாத் குஜ்ஜர் (38). இவர் இன்றைய தினம் திருப்பதி உயிரியல் பூங்காவில் உற்சாகமாக வலம் வந்தார். ஆங்காங்கே நின்று செல்ஃபி எடுத்து வந்தவர், சிங்கம் அடைக்கப்பட்டிருந்த திறந்தவெளி தடுப்பு பகுதிக்கும் வந்தார்.
அங்கே அடைபட்டிருந்த சிங்கத்துடன் வேலிக்கு வெளியில் இருந்து செல்ஃபி எடுக்க முயன்றார். சிங்கம் சற்றும் தொலைவில் இருந்ததில், கேமராவில் சரியாக பதிவாகவில்லை. சற்றும் யோசிக்காத அவர், 25 அடி உயரமுள்ள வேலியைத் தாண்டி குதித்துள்ளார். இதைக் கண்ட உயிரியல் பூங்காவின் உதவியாளர்கள் உடனே ஓடிவந்து, குஜ்ஜாராரை அங்கிருந்து வெளியேறும்படி வற்புறுத்தினார்கள்.
அவரோ சிங்கத்துடன் செல்ஃபி எடுத்தே தீர்வது என செல்போன் கேமராவில் சற்று தொலைவில் இருக்கும் சிங்கத்துடன் செல்ஃபி கோணம் பார்த்தார். அப்போது அவர் எதிர்பாரா கணத்தில் பாய்ந்து வந்த சிங்கம் குஜ்ஜாரைத் தாக்க முயன்றது. தாமதமாகவே சுதாரித்த குஜ்ஜார் அங்கிருந்து வேலியில் ஏறி தப்ப முயற்சிப்பதற்குள் சிங்கத்தின் தாக்குதலுக்கு ஆளானார்.
மிருககாட்சி சாலையின் உதவியாளர்கள் ஒன்று கூடி, சிங்கத்திடமிருந்து குஜ்ஜாரை மீட்டனர். சிங்கத்தை பிரித்து தனியாக கூண்டில் அடைத்தனர். ஆனால் அதற்குள் குஜ்ஜார் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அந்த சிங்கத்தின் பராமரிப்பாளர்கள் அதனை கூண்டுக்குள் அடைத்தனர். அதனை உயிரியல் பூங்கா அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் பலியான குஜ்ஜாரின் குடும்பத்துக்கு தகவல் அனுப்பிய போலீசார் அங்கு தொடந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.