விடுதியில் தங்கியிருந்த மாணவிக்கு திடீர் வயிற்றுவலி..! சற்று நேரத்தில் பிறந்த குழந்தை..!

தர்மபுரி மாணவி ஒருவர் ஒட்டப்பட்டியில் உள்ள ஆதிதிராவிடர் விடுதியில் தங்கி கல்லூரிக்குச் சென்று வந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே மாணவியின் வயிறு பெரிதான நிலையில் காணப்பட்டதால், அவருடன் பயின்ற மாணவிகள் இதுகுறித்து விசாரித்துள்ளனர். அப்போது தனது உடல்வாகு இவ்வாறு தான் என அந்த மாணவி தெரிவித்துள்ளார். இதனால் பிற மாணவிகளும், விடுதி காப்பாளரும் அது குறித்து பெரிதாக கவலை கொள்ளவில்லை.

இந்த நிலையில் கடந்த 13-ம் தேதி அதிகாலையில் அந்த மாணவி தனக்கு வயிறு வலிப்பதாக கூறி துடித்துள்ளார். இதனால் செய்வதறியாமல் சக மாணவிகள் திகைத்திருந்த நிலையில், அந்த மாணவிக்கு சிறிது நேரத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகளும், விடுதி காப்பாளரும் உடனடியாக மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் தோழிகள் மற்றும் உறவினர்களிடம் விடுதி நிர்வாகம் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது மாணவியின் பக்கத்து ஊரைச் சேர்ந்த 21 வயது இளைஞர் மனோஜ் என்பவருடன் மாணவி லிவ்-இன் உறவில் இருந்து வந்தது தெரியவந்தது. மாணவி இந்த விடுதியில் சேர்ந்து 7 மாதங்களுக்கு மேலாகியுள்ள நிலையில், விடுதியில் சேரும்போதே மாணவி கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மனோஜ் மற்றும் மாணவியின் குடும்பத்தினருக்கு விடுதி நிர்வாகத்தினர், போலீசார் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை இருதரப்பும் புகார் அளிக்காத நிலையில், மாணவிக்கு 18 வயது பூர்த்தியாகி உள்ளதா என்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் போலீசாரும், விடுதி நிர்வாகமும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விடுதியில் தங்கி இருந்த மாணவிக்கு குழந்தை பிறந்த சம்பவம் தருமபுரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *