வந்துவிட்டது Kinetic E-Luna எலெக்ட்ரிக் பைக்… விலை என்ன தெரியுமா?
Kinetic Green நிறுவனம் தங்களது பழைய லூனா பைக்கின் புதிய அவதாரமான எலெக்ட்ரிக் லூனா (E-Luna) பைக்கை அறிமுகம் செய்துள்ளது. E-Luna பைக்கிற்கான முன்பதிவு ஜனவரி 26-ம் தேதியே தொடங்கிவிட்ட நிலையில், இதுவரை 40,000 –க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இந்த எலெக்ட்ரிக் பைக் குறித்து Kinetic Green நிறுவனத்திடம் விசாரித்துள்ளார்கள்.
நகர்ப்புற மற்றும் கிராமப்புற வாடிக்கையாளர்களை இலக்காக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது E-Luna. இந்த எலெக்ட்ரிக் பைக்கை வாங்கினால் ஒரு மாதத்திற்கு வெறும் ரூ.2,500 மட்டும் செலவழித்தால் போதும் என்று கூறியுள்ள Kinetic Green நிறுவனம், 2025-ம் ஆண்டிற்குள் 1,00,000 பைக்குகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.
E-Luna பைக் முற்றிலும் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. 150 கிலோ எடை வரை தாங்கும் சக்தி கொண்ட இந்த பைக்கில், 2.2kW BLDC மோட்டாரும் IP67 சான்றிதழ் பெற்ற 2kWh லித்தியன் அயன் பேட்டரியும் உள்ளது. மேலும் இந்த எலக்ட்ரிக் பைக்கில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும், தேவைப்பட்டால் பேட்டரியை கழற்றி மாற்றிக்கொள்ளும் வசதியும் உள்ளது.
ஒருமுறை சார்ஜ் செய்தாலே 110கி.மீ வரை செல்லக்கூடிய E-Luna பைக்கின் அதிகபட்ச வேகம் 50kmph ஆகும். இதன் பேட்டரியை முழுதாக சார்ஜ் செய்ய ஏறக்குறைய நான்கு மணி நேரம் ஆகும். எதிர்காலத்தில் 1.7kWh மற்றும் 3.0kWh பேட்டரி ஆப்ஷனை E-Luna பைக்கில் எதிர்பார்க்கலாம் என Kinetic Green நிறுவனம் கூறியுள்ளது.
அதிக வலுவுள்ள ஸ்டீல் சேஸிஸ் மற்றும் டூயல் டூபுலர் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள E-Luna பைக்கின் முன்பக்கம் டெலஸ்கோபிக் ஃபோர்க் உள்ளது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட், USB சார்ஜிங் போர்ட், மூன்று வகையான ரைடிங் மோட், பின் இருக்கையை கழற்றி மாட்டிக் கொள்ளும் வசதி மற்றும் சைட் ஸ்டாண்ட் சென்ஸார் ஆகியவற்றை இந்த பைக்கின் சிறப்பம்சங்களாக கூறலாம்.
Kinetic Green குழுமத்தைச் சேர்ந்த பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்தே E-Luna பைக்கின் டிரேட்மார்க் சேஸிஸ், டிரான்ஸ்மிஸன், ஸ்மார்ட் கன்ட்ரோலர், டிஜிட்டல் க்ளஸ்டர் மற்றும் மோட்டார் ஆகியவற்றை தயாரித்துள்ளன. E-Luna பைக்கை உருவாக்க கடந்த மூன்று வருடங்களாக Kinetic Green நிறுவனத்தைச் சேர்ந்த பல ஊழியர்கள் கடுமையாக உழைத்துள்ளார்கள். E-Luna பைக் 100 சதவிகிதம் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது எனக் கூறிக் கொள்வதில் நாங்கள் பெருமிதப்படுகிறோம் என Kinetic குழுமத்தின் தலைவர் அருன் ஃபிரோடியா கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், வாடிக்கையாளர்களை மையமாக வைத்தே இந்த எலக்ட்ரிக் பைக்கை உருவாக்கியுள்ளோம். இதை மற்ற எலக்ட்ரிக் வாகனம் போல் நீங்கள் நினைத்துவிடக் கூடாது. நம்முடைய பர்சனல் உபயோகத்திற்கு மட்டுமின்றி வரத்தக நோக்கத்திற்காகவும் E-Luna பைக்கை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றார்.
மல்பெரி ரெட், பியர்ல் யெல்லோ, கருப்பு, கடல் நீலம், பச்சை என ஐந்து நிறுவனங்களில் E-Luna பைக் கிடைக்கிறது. கூடிய விரைவில் நாடு முழுவதும் இந்த பைக்கின் டெலிவரி தொடங்கும் என கூறப்படும் நிலையில், அமேஸான் மற்றும் ஃபிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் தளம் மூலமாகவும் இந்த எலக்ட்ரிக் பைக்கை வாங்கலாம்.