விற்பனையில் சாதனை… இந்தியாவில் புதிய மைல்கல்லை எட்டியிருக்கும் நிசான் நிறுவனம்!
ஜப்பானை சேர்ந்த பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான நிசான் நிறுவனம் இந்தியாவில் தனது எஸ்யூவி தயாரிப்பான மேக்னைட் (Magnite) விற்பனை மூலம் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தியாவில் அறிமுகப்படுத்தியதில் இருந்து சப்-காம்பாக்ட் எஸ்யூவியாக இருக்கும் Magnite காரின் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட யூனிட்ஸ்களை நிசான் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
இது தொடர்பான அறிக்கை ஒன்றில் மேக்னைட் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து ஒரு லட்சம் யூனிட் விற்பனையை தாண்டியுள்ளதாக நிசான் கூறியுள்ளது. தற்போது இந்தியாவில் நிசான் விற்பனை செய்யும் ஒரே மாடல் மேக்னைட் மட்டுமே. இந்தியாவில் இந்த எஸ்யூவி-யை விற்பனை செய்வது மட்டுமின்றி, பல்வேறு வெளிநாட்டு சந்தைகளுக்கும் இந்த காரை நிசான் இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது.
வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் Magnite SUV-ஆனது இந்தியாவில் முதன்முதலில் கடந்த 2020-ஆம் ஆண்டு ரூ. 4.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற அறிமுக விலையில் வெளியிடப்பட்டது. அப்போதிருந்து, இந்த மாடல் இந்திய சந்தையில் நிசான் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சிக்கு தொடர்ந்து உதவி வருகிறது. தற்போது இந்த மாடல் ரூ.6 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
இது 1.0 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என 2 எஞ்சின் ஆப்ஷனில் அறிமுகமானது. முதலாவதாக குறிப்பிட்ட எஞ்சின் 71BHP பவர் மற்றும் 96Nm பீக் டார்க்கை உருவாக்கும் அதே நேரம் இரண்டாவதாக குறிப்பிட்ட எஞ்சின் 99 BHP பவர் மற்றும் 152 Nm பீக் டார்க்கை வெளிப்படுத்துகிறது. இந்த நிலையில் கடந்த 2023-ஆம் ஆண்டில் நிசான் நிறுவனம் புதிதாக Geza மற்றும் Kuro எடிஷன்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் Magnite சப்காம்பாக்ட் எஸ்யூவி லைன்அப்-ஐ விரிவுப்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து EZ-Shift என அழைக்கப்படும் ஆட்டோமேட்டட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் (AMT) வெர்ஷனையும் அறிமுகப்படுத்தியது. கடந்த ஆண்டு அறிமுகமான Geza மற்றும் Kuro எடிஷன்கள் எக்ஸ்டீரியர் மற்றும் இன்டீரியர் ஸ்டைலிங் அப்டேட்ஸ்களை கொண்டிருந்த நிலையில், மேக்னைட் AMT மாடல் வாடிக்கையாளருக்கு ட்ரான்ஸ்மிஷன் அடிப்படையில் கூடுதலாக சில ஆப்ஷன்களை வழங்குகிறது.
விலை எவ்வளவு?
இது 5-ஸ்பீட் ஆட்டோமேட்டட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்ட 1.0லி நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சினுடன் ரூ.6.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற அறிமுக விலையில் வெளியிடப்பட்டது. மொத்தத்தில் மேக்னைட் கார் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலைகளானது ரூ.6 லட்சம் முதல் துவங்கி ரூ.11.10 லட்சம் வரை செல்கிறது.