கேரளா ஸ்டைல் மலபார் மீன் குழம்பு… ரெசிபி இதோ.!
நெய் சோறு, புட்டு, கடலைக் கறி, செம்மீன், மீன் பொளிச்சது, அடைப் பிரதமன், மலபார் மீன் குழம்பு, மீன் கறி, அப்பம் போன்ற ஏராளமான கேரளா உணவுகள் உலகம் முழுவதும் அறியப்படும் பிரபல உணவுகளாக இருந்து வருகின்றன.
அதில் ஒன்று தான் மலபார் மீன் குழம்பு. மலபார் மீன் குழம்பு என்பது புளி, தேங்காய் பால் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு சுவையான கேரளா உணவாகும். இந்த மீன் குழம்பை தேங்காய் பால் ஊற்றி செய்வதால் அதன் ருசி அருமையாக இருக்கும்.
இந்த கேரளா ஸ்டைல் மலபார் மீன் குழம்பை தேங்காய் பால் ஊற்றி எளிய முறையில் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
எலும்பு இல்லாத மீன் துண்டுகள் – 500 கிராம்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
கெட்டியான தேங்காய் பால் – 1 கப்
புளி கரைசல் – தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் – 4
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் – 1.5 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 1 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 3-4 டேபிள் ஸ்பூன்
கடுகு விதைகள் – 3/4 டீஸ்பூன்
சீரகம் – 3/4 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 3 கொத்து
செய்முறை :
எலும்பு இல்லாத மீன்களை நன்றாக சுத்தம் செய்து அலசி 2 அங்குல துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துண்டுகளை சேர்த்து நன்றாக அரைத்து அதன் பாலை வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
பின்னர் தேவையான அளவு புளி எடுத்து அதில் தண்ணீர் சேர்த்து கரைத்து அதன் கரைசலை எடுத்து கொள்ளவும்.
அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், பெருஞ்சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கொள்ளவும்.
பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்.
பிறகு வெங்காயத்தில் சிறிதளவு உப்பு சேர்த்து கிளறி மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு வதக்கிக்கொள்ளவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து குறைந்த வெப்பத்தில் 2 நிமிடங்களுக்கு வதக்கவும்.
பின்னர் அதனுடன் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து கிளறி மிதமான தீயில் ஒரு நிமிடம் வதக்கவும்.
அடுத்து அதில் மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சீரகப் பொடி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து அதனுடன் உப்பு மற்றும் புளி கரைசல் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
வெங்காயம் மற்றும் தக்காளி முழுவதுமாக மசாலாக்களுடன் சேர்ந்து எண்ணெய் பிரியும் வரை 5 நிமிடங்களுக்கு மிதமான தீயில் சமைக்கவும்.
எண்ணெய் பிரியும் தருவாயில் தேங்காய் பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து எண்ணெய் பிரியும் வரை 3 நிமிடங்கள் சமைக்கவும்.
இது கொதித்தவுடன் மீன் துண்டுகளைச் சேர்த்து மெதுவாகக் கிளறி மூடி 10 நிமிடங்களுக்கு குறைந்த தீயில் சமைக்கவும்.
பிறகு தேவைப்பட்டால் உப்பு சேர்த்து கலந்து கொதிக்கவிட்டு இறக்கினால் சுவையான கேரளா ஸ்டைல் மலபார் மீன் குழம்பு தயார்.
இந்த மீன் குழம்பை சாதத்துடன் சேர்த்து பரிமாறுவதற்கு முன் அரை மணிநேரம் அதை அப்படியே வைத்துவிடுங்கள்.