மாதம் ₹1.5 லட்சம் வருமானம்… ஜூஸ் தொழிலில் செய்யவேண்டிய நுணுக்கங்கள் என்ன..?
சரிவிகித உணவின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிவோம். எனினும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த ஜூஸ் வகைகள் நமது உணவில் அமைதியான எனினும் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பிறகு இந்தியாவில் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு மக்களிடையே அதிக அளவில் காணப்படுகிறது. இதற்கு ஆதாரமாக ஜூஸ் கடைகள் விளங்குகின்றன.
ஜூஸ் கடைகளில் பழங்கள் மற்றும் காய்கறிச் சாறுகள் மட்டுமல்லாமல் புரோட்டீன் ஷேக் போன்ற ஆரோக்கியமான பானங்களும் விற்பனை செய்யப்படுகின்றது. ஒருவேளை சொந்தமாக ஒரு தொழில் தொடங்கி முதலாளியாக வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருந்தால் ஜூஸ் பிசினஸ் நிச்சயமாக ஒரு நல்ல யோசனையாக இருக்கும். ஜூஸ் பிசினஸ் ஆரம்பிப்பதற்கான அத்தியாவசிய தேவைகள் என்னென்ன, இதற்கான ஆரம்ப முதலீடு எவ்வளவு, நமக்கு கிடைக்கப் போகும் லாபம் எவ்வளவு போன்ற சில விஷயங்களை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
அத்தியாவசிய தேவைகள் :
ஜூஸ் கார்னர் ஆரம்பிப்பதற்கு முதலில் நீங்கள் மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி போன்ற இடத்தில் இருந்து அனுமதி பெற வேண்டும். தேவையான அனுமதிகளை பெற்ற பிறகு ஜூஸ் கடை ஆரம்பிக்கப் போகும் இடத்தை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். அது சொந்த இடமாக இருந்தாலும் சரி வாடகை இடமாக இருந்தாலும் சரி, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மார்க்கெட் போன்ற இடத்தை தேர்வு செய்யுங்கள். அடுத்தபடியாக ஃப்ரூட் மிக்ஸர்கள், கட்டிங் மெஷின் மற்றும் குளிர்சாதன பெட்டி போன்ற கருவிகளை நீங்கள் வாங்க வேண்டும்.
வாடிக்கையாளர்கள் :
தினமும் ஜிம்மிற்கு சென்று பயிற்சி செய்பவர்கள் மற்றும் ஃபிட்னஸ் ஆர்வலர்கள் போன்ற ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய நபர்கள் நிறைந்த பகுதியில் ஜூஸ் கடை ஆரம்பிப்பது புத்திசாலித்தனமான யோசனையாக அமையும்.
சிறப்பு சலுகைகள் மற்றும் பிரமோஷன்கள் வழங்குவது, ஃபிட்னஸ் மையங்களுக்கு அருகில் கடையை ஆரம்பிப்பது போன்றவை நீங்கள் பின்பற்ற வேண்டிய ஒரு சில நுணுக்கமான யுக்திகள்.
முதலீட்டு விபரங்கள் :
நல்ல லாபம் ஈட்டு தரக்கூடிய இந்த ஜூஸ் பிசினஸுக்கு சம்பந்தப்பட்ட பொருட்கள் வாங்குவதற்கு உங்களுக்கு தோராயமாக 5 முதல் 7 லட்சம் ரூபாய் வரை முதலீடு தேவைப்படும். வருடம் முழுவதுமே அந்தந்த சீசனுக்கு தகுந்தாற்போல நீங்கள் ஜூஸ் வகைகளை மாற்றிக் கொண்டே இருக்கலாம்.
ஜூஸ் பிசினஸில் வரக்கூடிய லாபம் என்பது இடத்திற்கு தகுந்தாற்போல மாறுபடலாம். எனினும் நீங்கள் விற்பனை செய்யக்கூடிய ஒவ்வொரு ஜூஸ் கிளாஸிலும் உங்களுக்கு 50 முதல் 70 சதவீதம் லாபம் கிடைக்கும்.
உதாரணமாக, உங்கள் கடையில் ஒரு நாளைக்கு 10,000 ரூபாய் விற்பனை ஆவதாக வைத்துக் கொள்வோம். இப்படி இருக்க உங்களுக்கு இதில் 5000 ரூபாய் லாபம் கிடைக்கும்.