சிறந்த பெண் தொழிலதிபருக்கான விருதை வென்ற ஈஷா அம்பானி
லோக்மத் விருது என்பது ஒட்டுமொத்த ரிலையன்ஸ் குழுமத்துக்கும் கிடைத்த வெற்றி என்று ஈஷா அம்பானி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் லோக்மத் குழுமத்தின் சார்பில் நடப்பு 2024 ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா மும்பையில் நடைபெற்றது. அந்த விழாவில் சிறந்த பெண் தொழிலதிபருக்கான விருதை ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மகளும், ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் இயக்குநருமான ஈஷா அம்பானிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அவருக்கு வழங்கி கவுரவித்தார்.
விருதை வாங்கிய பின் பேசிய ஈஷா அம்பானி, லோக்மத் விருது என்பது ஒட்டுமொத்த ரிலையன்ஸ் குழுமத்துக்கும் கிடைத்த வெற்றி என்று தெரிவித்தார். இந்த விருது புதிய இந்தியாவை உருவாக்க கடின உழைப்பை அளித்து, உறுதியுடன் செயல்படும் ஒட்டுமொத்த ரிலையன்ஸ் குடும்பத்தினருக்கும் சொந்தமானது. நாங்கள் கவனித்துக் கொள்கிறோம் என்ற ரிலையன்ஸின் கொள்கைக்கு கிடைத்த அங்கீகாரமே இந்த விருது என்று கூறினா. மேலும், ரிலையன்ஸைப் பொருத்தவரை, மக்களை நாங்கள் கவனிக்கிறோம், மக்கள் ஒவ்வொருவரையும் கவனிக்கிறார்கள். இந்திய தேசத்தையும், கிரகத்தையும் நாங்கள் கவனித்துக் கொள்கிறோம் என்று ஈஷா அம்பானி தெரிவித்தார்.
இந்த விழாவில், ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, ஈஷா அம்பானியின் கணவர் ஆனந்த் பிரமால் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ., பட்டம் பெற்ற இஷா அம்பானி, ஏற்கனவே ஃபோர்ப்ஸ் இந்தியா சார்பில் அடுத்த தலைமுறைக்கான சிறந்த தொழில்முனைவோர் (GenNext Entrepreneur) விருதை கடந்த 2023-ம் ஆண்டு வென்றார். அத்துடன், டைம் இதழ் சார்பில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களில் ஒருவர் என்ற அங்கீகாரமும் கிடைத்தது.