ரோஹித் சர்மாவுக்கு போன கேப்டன் பதவி.. 24 மணி நேரத்துக்குள் ஹர்திக் பாண்டியா வெளியிட்ட பதிலடி வீடியோ
இந்திய டி20 அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தான் என்றும், அவரது தலைமையில் தான் இந்திய அணி 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கப் போகிறது எனவும் நேற்றைக்கு முந்தைய தினம் அறிவித்தார் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா.
2022 டி20 உலகக்கோப்பை முடிந்த பின் ரோஹித் சர்மா அணியில் இடம் பெறாத நிலையில் 14 டி20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்டியா இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டார். அப்போது ஹர்திக் பாண்டியாவை இந்திய டி20 அணியின் கேப்டனாக நிரந்தரமாக நியமிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அப்போது ஹர்திக் பாண்டியா காயத்தில் சிக்கினார்.
இதனிடையே ஆப்கானிஸ்தான் டி20 தொடரின் போது டி20 அணிக்கு திரும்பிய ரோஹித் சர்மா, டி20 அணியின் கேப்டன் பதவியை தக்க வைத்துக் கொண்டார். இந்த நிலையில், சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா உலகக்கோப்பை வெல்லும் என அறிவித்தார். மேலும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக இருப்பார் எனவும் தெளிவுபடுத்தினார்.
இந்த அறிவிப்பை வெளியிட்ட 24 மணி நேரத்திற்குள் ஹர்திக் பாண்டியா தான் ஐபிஎல் தொடருக்கு தயாராகி வரும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் பேட்டிங் பயிற்சி செய்யும் அவர் ஒவ்வொரு பந்தையும் சிக்ஸ் அடிக்கிறார். இந்த காட்சிகள் மறைமுகமாக ரோஹித் சர்மாவுக்கான பதிலடி என சில ரசிகர்கள் அந்த வீடியோவின் கீழ் பதிவிட்டு உள்ளனர்.
முன்னதாக ரோஹித் சர்மா மனைவி, மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர், ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது குறித்த பேட்டியில் பல விஷயங்கள் தவறாக இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய போதும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா இதே போன்ற பயிற்சி வீடியோ வெளியிட்டு பதிலடி கொடுத்திருந்தார்.