ராஜ்கோட் ராஜா.. குடும்ப பிரச்சனைலாம் என்னை பாதிக்காது.. கபில் தேவ், அஸ்வின் சாதனையை சமன் செய்த ஜடேஜா
தந்தை அனிருத்சிங் ஜடேஜா மற்றும் மனைவி ரிவாபா இடையிலான மோதல் உச்சத்தில் இருக்கும் சூழலிலும், இந்திய வீரர் ஜடேஜா சதம் விளாசி இந்திய அணியை மீட்டுள்ளார்.
அண்மையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி குறித்து அவரின் தந்தை அனிருத்சிங் ஜடேஜா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். ரவீந்திர ஜடேஜாவை திருமணம் செய்த மூன்று மாதங்களில் சொத்துகளை தனது பெயருக்கு மாற்றம் செய்யக் கோரி ரிவாபா நின்றதாகவும், மனைவியின் குடும்பத்தினர் ஜடேஜாவை கட்டுப்படுத்தி வருவதாகவும் கூறினார்.
அதுமட்டுமல்லாமல் குடும்பம் பிரிந்ததற்கு காரணமே ரிவாபா தான் என்றும், ஜடேஜாவை நேரில் சந்தித்து பல ஆண்டுகள் கடந்துவிட்டது என்றும் விமர்சித்தார். இதையடுத்து ஜடேஜா, மனைவியின் பெயருக்கு களங்கள் விளைவிக்கும் முயற்சி இது. என்னாலும் சில கருத்துகள் சொல்ல வேண்டியதிருக்கும். ஆனால் பொதுவெளியில் சொல்ல விரும்பவில்லை என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.
இதனால் ஜடேஜாவின் குடும்ப விவகாரம் ரசிகர்களிடையே பேசுபொருளாகியது. இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி ரவீந்திர ஜடேஜாவின் சொந்த மைதானமான ராஜ்கோட் மைதானத்தில் தொடங்கியது. வழக்கமாக உள்ளூர் வீரர்களுக்கு அந்தந்த மாநிலங்களில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும்.
விசாகப்பட்டினத்தில் நடந்த 2வது டெஸ்டில் கேஎஸ் பரத்திற்கு மிகப்பெரிய வரவேற்பை அம்மாநில ரசிகர்கள் வழங்கினர். ஆனால் ராஜ்கோட் மைதானத்தில் ஜடேஜாவுக்கு குடும்பத்தினரும் நேரில் வந்து ஆதரவளிக்கவில்லை. அதேபோல் ரசிகர்களும் பெரியளவில் ஆதரவு அளிக்கவில்லை. இந்த நிலையில் இந்திய அணி 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி கொண்டிருந்தது.
அப்போது 5வது பேட்ஸ்மேனாக ஆச்சரியம் கொடுத்த ஜடேஜா, முதல் நாள் முழுக்க நின்று சதத்தை விளாசி இருக்கிறார். முதல்தர கிரிக்கெட்டில் ராஜ்கோட் மைதானத்தில் 17 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள 6 சதங்கள், 4 அரைசதங்கள் உட்பட 1,564 ரன்களை விளாசி இருக்கிறார். அந்த அனுபவத்தை பயன்படுத்தி அசத்தலாக 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறி உள்ளார். இதன் மூலம் இந்திய அணிக்காக 3 ஆயிரம் ரன்கள் மற்றும் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது வீரர் என்ற சாதனையை ஜடேஜா படைத்துள்ளார்.