Siren Review: சைரன் விமர்சனம்.. ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் மோதல்.. படம் வொர்த்தா? இல்லையா?
சென்னை: விஸ்வாசம், சர்தார் உள்ளிட்ட படங்களில் துணை திரைக்கதையாசிரியராக பணியாற்றிய அந்தோனி பாக்கியராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, அனுபமா பரமேஸ்வரன், அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ள சைரன் 108 படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
கோமாளி படத்தில் கிளைமேக்ஸில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வேஷம் போட்டு நடித்த ஜெயம் ரவி இந்த படம் முழுக்கவே சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் திலக வர்மன் எனும் கதாபாத்திரத்தில் கர்ஜித்து இருக்கிறார்.
கைதி படத்தை போலவே இந்த படத்திலும் அப்பா மற்றும் மகள் பாசம் உள்ளது. இரண்டு கதையும் ஒரே கதையல்ல என இயக்குநரும் விளக்கம் கொடுத்திருந்தார். இந்நிலையில், சைரன் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
சைரன் கதை: அறிமுக இயக்குநர்களை வரிசையாக நம்பி படங்களில் நடித்து மாஸ் காட்டி வருகிறார் ஜெயம் ரவி. பிரதீப் ஆண்டனியுடன் கோமாளி படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார். அதே போல தற்போது அந்தோனி பாக்கியராஜை நம்பி களமிறங்கிய ஜெயம் ரவிக்கு நல்லதொரு படத்தையே கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர். செய்யாத குற்றத்திற்காக 14 ஆண்டுகள் சிறையில் அடைந்துக் கிடக்கிறார் ஜெயம் ரவி.
மாற்றுத்திறனாளியான மனைவி அனுபமா பரமேஸ்வரனின் பிரிவு ஒரு பக்கம், சிறு வயதில் இருந்தே தனது மகளை பார்க்க வேண்டும் என்கிற தவிப்பு ஒரு பக்கம். பரோலில் வெளிவரும் ஜெயம் ரவி போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவி எப்படி பழிவாங்குகிறார். ஜெயம் ரவி தான் இதையெல்லாம் செய்கிறார் என சந்தேகப்படும் கீர்த்தி சுரேஷ் ஜெயம் ரவியை கையும் களவுமாக பிடிக்கிறாரா? இல்லையா? என்பது தான் இந்த சைரன் 108 படத்தின் கதை.
ஆம்புலன்ஸ் சைரன் vs போலீஸ் சைரன்: ஆம்புலன்ஸ் டிரைவரான ஜெயம் ரவிக்கும் போலீஸான கீர்த்தி சுரேஷுக்கும் இடையே ஏற்படும் ஆடு புலி ஆட்டமாக இந்த படத்தின் திரைக்கதையை சுவாரஸ்யமாக எழுதி காட்சிகளாகவும் இயக்கி ஸ்கோர் செய்து விட்டார் ஆண்டனி பாக்கியராஜ். போலீஸ் சைரன் வென்றதா? ஆம்புலன்ஸ் சைரன் கடைசியில் வென்றதா? என்கிற போட்டா போட்டியை கொடுத்த விதத்தில் சபாஷ் பெறுகிறது படம்.
நடிகர்களின் பர்ஃபார்மன்ஸ்: கொஞ்ச நேரம் வரும் ஃபிளாஷ்பேக்கில் மட்டுமே இளமையான ஜெயம் ரவி வருகிறார். காது கேளாத வாய் பேச முடியாத பெண்ணாக அனுபமா பரமேஸ்வரன் வந்து போகிறார். ஜெயம் ரவியை தாண்டி இந்த படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஸ்கோர் செய்ய நிறைய ஸ்பேஸ் இருக்கிறது. அதை தெளிவாக புரிந்துக் கொண்டு காக்கிச்சட்டையில் கம்பீரமாக நடித்து கலக்கியிருக்கிறார். ஆரம்பத்தில் சிரிப்பு வந்தாலும், போக போக அவர் நடிப்பை பார்த்து ரசிகர்கள் கைதட்ட ஆரம்பிப்பதே அவரது நடிப்பின் வெற்றி என்று சொல்லலாம்.
பிளஸ்: படத்தின் கதை பழக்கப்பட்ட கதை தான் என்றாலும், அதில் யோகி பாபுவின் காமெடியை முதல் பாதியில் மிக்ஸ் செய்து இரண்டாம் பாதியில் சமூக நோக்க சிந்தனைகளை கலந்து கொடுத்திருக்கும் விதம் சூப்பர். கடந்த ஆண்டு அயோத்தி படத்தில் ஆம்புலன்ஸ் டிரைவருக்கான முக்கியத்துவம் காட்டப்பட்டு இருந்தது. கேபிஒய் பாலா 5 ஆம்புலன்ஸ்களை இதுவரை வாங்கி ஒவ்வொரு ஊர்களுக்கும் வழங்கி வருகிறார். இந்நிலையில், ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கான டிரிபியூட்டாகவும் இந்த படம் மாறியுள்ளது கூடுதல் சிறப்பு. வில்லன்களாக அழகம் பெருமாள், சமுத்திரகனி கொடுத்த வேலையை செய்துள்ளனர்.
மைனஸ்: ஜி.வி. பிரகாஷ் பாடல்களும், சாம் சி.எஸ் பின்னணி இசையும் இந்த படத்துக்கு மேலும், கை கொடுத்திருந்தால் வேறலெவல் வெற்றியை படம் அடைந்திருக்கும். சில இடங்களில் கிரிஞ்சுத்தனமான காட்சிகளை இயக்குநர் தவிர்த்து இருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக ஒரு நல்ல படத்தை நல்ல நோக்கத்துடன் கொடுத்து ரசிகர்களை திருப்தியுடனே தியேட்டரை விட்டு திருப்பி அனுப்புகிறார். சைரன் – சக்சஸ்!