பிரதமர் வீடு கட்டும் திட்டம்: எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? யாரெல்லாம் தகுதி வாய்ந்தவர்கள்?

ஏழை எளிய மக்களுக்கு வீட்டு வசதியை வழங்க வேண்டும் என்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை 2015ஆம் ஆண்டில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் இரண்டு அம்சங்கள் உள்ளன. 1. நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டம். 2. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் மூலம் கிராமத்தில் வாழும் ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டம்.

நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி 2015ஆம் ஆண்டில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு குறைவாக உள்ளவர்கள் ரூ.6 லட்சம் வரை கடன் பெறலாம். அவர்களுக்கு கடன் தொகையில் 6.5% வட்டி மானியம் கிடைக்கும். ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் ரூ.6 லட்சம் வரை கடன் பெறலாம். அவர்களுக்கு கடன் தொகையில் 6.5% வட்டி மானியம் கிடைக்கும்.

அதேபோல், ரூ.6 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் ரூ.9 லட்சம் வரை கடன் பெறலாம். அவர்களுக்கு கடன் தொகையில் 4% வட்டி மானியம் கிடைக்கும். ரூ.12 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை ஊதியம் பெறுவோர் ரூ.12 லட்சம் வரை வீடு கட்டுவதற்கான கடன் உதவியைப் பெறலாம். அவர்களுக்கு கடன் தொகையில் 3% வட்டி மானியம் கிடைக்கும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 18 லட்சத்திற்கு மேல் இருந்தால் இந்தத் திட்டத்திற்கு நீங்கள் தகுதி பெற மாட்டீர்கள்.

இதனை எப்படி புரிந்து கொள்வது?

உதாரணத்துக்கு ரூ.12 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்ட குடும்பத்தினர், ரூ.50 லட்சம் மதிப்புள்ள வீட்டை வாங்க திட்டமிடுகின்றனர். அதில், ரூ.10 லட்சம் முன்பணமாகவும், மீதமுள்ள ரூ.40 லட்சத்தை வங்கிக் கடன் மூலம் ஏற்பாடு செய்கிறார்கள். இந்த வகையில் வரும் விண்ணப்பதாரர்கள், ரூ.12 லட்சம் வரையிலான கடனுக்கு 3% வட்டி மானியத்தை பெற முடியும். அதன்படி, ரூ.12 லட்சம் தொகைக்கு 3% வட்டி மானியமாக ரூ.2,30156 பெற முடியும். இந்த தொகை வங்கி கடன் கணக்கில் கழிக்கப்பட்டு விடும். மீதமுள்ள ரூ.28 லட்சம் கடன் தொகைக்கு வழக்கம் போல் வட்டி விகிதங்களை செலுத்த வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது?

மேற்சொன்ன தகுதிகள் உங்களுக்கு இருக்கும்பட்சத்தில், pmaymis.gov.in என்ற இணையதளத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். இந்த இணையதளத்தில் லாகின் செய்து சிட்டிசன் அசெஸ்மென்டை (Citizen Assessment) க்ளிக் செய்ய வேண்டும். குடிசை வாழ் மக்களாக இருந்தால் குடிசைவாசிகள் அல்லது benefits under other 3 components என்பதனை க்ளிக் செய்ய வேண்டும். பின்னர், உங்கள் ஆதார் விவரம், வங்கிக் கணக்கு, பெயர், ஊதியம், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, தற்போது வசிக்கும் வீட்டின் முகவரி, குடும்பத் தலைவரின் பெயர், வீட்டின் முகவரி போன்ற தனிப்பட்ட விவரங்களை உள்ளிட வேண்டும். அனைத்து தகவல்களையும் சரிபார்த்த பிறகு, படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

நீங்கள் விரும்பினால் பொதுச் சேவை மையத்திற்குச் சென்று நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம். கட்டணம் செலுத்தி படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்

நீங்கள் நேரடியாக வங்கியையோ, வீட்டுக் கடன் வசதி தரும் நிறுவனத்தையோ அணுகி கடன் வாங்கும்போது, நீங்கள் பெறுகின்ற கடன் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் விதிமுறைகளுக்குப் பொருந்தி வரும் என்றால், அந்த வங்கியோ, வீட்டுக் கடன் வசதி தரும் நிதி நிறுவனமோ, நேரடியாக வீட்டு வசதி அமைச்சகத்திடம் அல்லது தேசிய வீட்டு வங்கியிடமோ, தகவல்களை அளித்து அந்த மானியத் தொகையை உங்களின் கடன் கணக்கில் வரவு வைத்துவிடும்.

தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

** இந்தத் திட்டம் கட்டுமான நிறுவனத்திடமிருந்து புது வீடு வாங்குவோருக்கும், தங்களின் சொந்த மனையில் வீடு கட்டுவதற்கு மட்டுமே பொருந்தும். பழைய கட்டப்பட்ட வீட்டை வாங்குபவர்களுக்குப் பொருந்தாது

** ஒரு வங்கி மற்றும் வீட்டு வசதி நிறுவனத்திடமிருந்து, மற்றொரு வங்கி மற்றும் வீட்டு வசதி நிறுவனத்துக்கு மாற்றும் கடனுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது.

** இந்தத் திட்டத்தின் மூலம் மானியத்தொகை பெற்றாலும் கடனை முன்கூட்டியே செலுத்தி முடிக்கும் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

** மானியத்தொகை கடன் கணக்கில் வரவு வைக்கப்பட்டவுடம், கடன் தொகை குறைக்கப்பட்டு, மீதமுள்ள கடன் தொகைக்கு மட்டுமே வட்டி கணக்கிடப்படும்

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? தகுதிகள் என்ன?

** 18 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். அதிகபட்சம் 55 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

** இத்திட்டத்தின் கீழ் ஒரு முறை பயன் பெற்ற பிறகு, மீண்டும் அதைப் பெற முடியாது

** திட்ட பலனை பெறுபவர்களுக்கு இந்தியாவில் எங்கும் கான்கிரீட் வீடு இருக்கக்கூடாது. ஏற்கனவே வீடு வாங்க அரசு மானியம் எடுத்திருக்கக் கூடாது.

** பயனாளிகள் மேற்சொன்ன வருமான வரம்புகளில் வர வேண்டும். அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

** பயனாளியில் கணவன், மனைவி மற்றும் திருமணமாகாத குழந்தைகளும் இருக்கலாம்.

** 21 சதுர அடிக்கும் குறைவான வீடு உள்ளவர்கள், ஏற்கெனவே உள்ள வீட்டை மேம்படுத்துவதற்கான திட்டத்தில் இணையலாம்

** குடும்பத்தில் உள்ள சம்பாதிக்கும் வயது வந்தவர்கள் தனிக் குடும்பமாக கருதப்படுவர். அதனால் அவர்களின் திருமண நிலையைப் பொருட்படுத்தாமல் அவர்களும் இந்த திட்டத்தின் பயனாளிகளாக கருதப்படுவார்கள்

** திருமணமான தம்பதியரில் ஒருவரோ அல்லது இருவரும் இணைந்தோ, இந்த திட்டத்திற்கான வருமான உச்சவரம்பு தகுதி இருக்கும் பட்சத்தில் ஒரு தனி வீடு பெற தகுதி உடையவர் ஆவர்

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் திட்டம்

அதேபோல், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் மூலம் கிராமத்தில் வாழும் ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்துக்கு rhreporting.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *