தலைக்கனம்.. ஜெய் ஷாவை மதிக்காத இந்திய வீரர்.. பின்னணியில் ஐபிஎல் அணி.. தடை விதிக்க வாய்ப்பு?
மும்பை : பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பேச்சை மதிக்காத இந்திய வீரர் இஷான் கிஷன் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இரு நாட்கள் முன்பு பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்கள் அனைவரும் ரஞ்சி ட்ராஃபி தொடரில் பங்கேற்க வேண்டும் என ஜெய் ஷா கூறி இருந்தார்.
ஆனால், இஷான் கிஷன் அதை மதிக்கவில்லை. ஜார்கண்ட் மாநில அணியில் அவர் அடுத்த ரஞ்சி ட்ராபி போட்டியில் இடம் பெற்றிருக்கவேண்டும். ஆனால், அடுத்த போட்டிக்கு இஷான் கிஷன் இல்லாத, வேறு 11 வீரர்களை அந்த அணி அறிவித்து உள்ளது. இஷான் கிஷன் இன்னும் ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் அமைப்பை தொடர்பு கொள்ளவே இல்லை.
முன்னதாக இஷான் கிஷன் டி20 அணியில் தனக்கு பதிலாக ஜிதேஷ் சர்மா என்ற புதிய வீரருக்கு விக்கெட் கீப்பராக ஆட வாய்ப்பு அளித்ததில் மனமுடைந்து தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணத்தில் பாதியில் வெளியேறியதாக தகவல் வெளியானது. அதன் பின் இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் இஷான் கிஷனை உள்ளூர் போட்டிகளில் ஆடினால் இந்திய அணியில் தேர்வு செய்கிறோம் என கூறினர்.
ஆனால், 2024 ஐபிஎல் தொடருக்கு தயார் ஆகும் வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் உதவியோடு, ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியா ஆகியோருடன் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். இந்த நிலையில் தான், ஜெய் ஷா, அனைத்து பிசிசிஐ ஒப்பந்த வீரர்களும் ரஞ்சி ட்ராஃபி தொடரில் பங்கேற்க வேண்டும் என காட்டமாக பேட்டி அளித்து இருந்தார்.
ஆனாலும், இஷான் கிஷன், ஜெய் ஷாவின் பேச்சை மதிக்காமல் நடந்து கொண்டு இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தீபக் சாஹர் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் ரஞ்சி ட்ராஃபியில் பங்கேற்காமல் உள்ளனர்.