சுவிஸ் மாகாணமொன்றில் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிராக கூடிய கூட்டம்: ஆச்சரிய முடிவு
சுவிஸ் மாகாணமொன்றில் அமைக்கப்பட்டுள்ள புகலிடக்கோரிகையாளர் மையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடினார்கள். ஆனால், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவோ, பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
புகலிடக்கோரிக்கை மையம் குறித்து விவாதிக்கக் கூடிய கூட்டம்
சுவிட்சர்லாந்தின் Thurgau மாகாணத்திலுள்ள Steckborn என்னுமிடத்தில், புகலிடக்கோரிக்கையாளர் மையம் ஒன்று உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் அந்த மையம் பெடரல் அரசால் அமைக்கப்பட்டது. அங்கு 120 புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கியுள்ளார்கள். ஆனால், 300 பேர் வரை தங்கவைக்கப்படும் வசதி அந்த மையத்தில் உள்ளது.
அந்த மையத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்போரின் அழைப்பில் பேரில், கூட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அழைப்பை ஏற்று அங்கு ஏராளமானோர் கூடினார்கள். ஆனால், தீயணைப்புத்துறை விதிகளின்படி அங்கு 700 பேருக்கு மேல் கூட அனுமதி இல்லை என்பதால், 700 பேர் மட்டுமே கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டார்கள்.
ஆச்சரிய முடிவு
புகலிடக்கோரிக்கை மையத்தை ஆதரிப்போர், எதிர்ப்போர் என இரு தரப்பினர் சார்பிலும் பொதுமக்கள் முன் விவாதங்கள் முன்வைக்கப்பட்டன. இறுதியில் பொதுமக்கள் தங்கள் முடிவை வாக்களிப்பு மூலம் தெரிவித்தார்கள்.
பொதுமக்களுடைய முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது. ஆம், பெரும்பான்மை மக்கள், அதாவது, குவிந்த வாக்குச்சீட்டுகளைப் பார்த்தாலே யாருக்கு அதிக வாக்குகள் என்பது வாக்குக்குச்சீட்டுகளை எண்ணாமலே புரிந்துவிட்டது என நகர மேயர் கூறும் அளவில், புகலிடக்கோரிக்கை மையத்துக்கு ஆதரவாக பொதுமக்கள் வாக்களித்திருந்தார்கள்.
பெரும் மாற்றம் ஏற்படலாம்…
ஆக, பொதுவாக பதவியில் அமர்ந்திருக்கும், பதவியைத் தக்கவைக்க முயற்சிக்கும், அரசியல்வாதிகள், புலம்பெயர்ந்தோருக்கும், புகலிடக்கோரிக்கையாளர்களுக்கும் எதிரான கருத்துக்களைத் தெரிவித்து வந்தாலும், பொதுமக்களின் கருத்தோ புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு ஆதரவாகவே உள்ளதை இந்த சம்பவம் வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.
மகிழ்ச்சியான விடயம் என்னவென்றால், நாளை இதே நிலை, ஆளும் அரசியல்வாதிகள் வாழும் Bernஇலும் எதிரொலிக்கக்கூடும், அது சுவிட்சர்லாந்தின் தேசிய புகலிடக்கொள்கை மீது பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும்!