ரஹானேவுக்கு நேர்ந்த அவமானம்.. அவுட் கொடுத்து அனுப்பிய அம்பயர்.. மீண்டும் பேட் செய்ய அழைத்த அசாம் அணி

அசாம் அணிக்கு எதிரான போட்டியில் ஃபீல்டிங் செய்யவிடாமல் தடுத்ததாக அவுட் கொடுக்கப்பட்ட வெளியேற்றப்பட்ட மும்பை அணி கேப்டன் ரஹானேவை எதிரணி அசாம் கேப்டன் மீண்டும் பேட்டிங் செய்ய அழைக்கப்பட்ட விவகாரம் ரசிகர்களிடையே பாராட்டை பெற்று வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்பட்டவர் அஜிங்கியா ரஹானே. அதன்பின் இந்திய அணி விளையாடிய தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் இந்திய அணி நிர்வாகத்தால் எந்தவித விளக்கமும் இல்லாமல் கழற்றிவிடப்பட்டார். கிட்டத்தட்ட இந்திய அணியின் கதவுகள் ரஹானேவுக்கு மூடப்பட்டதாகவே பார்க்கப்படுகிறது.

இருப்பினும் இஷான் கிஷன், குருணால் பாண்டியா உள்ளிட்டோரை போல் அல்லாமல் ரஞ்சி டிராபி தொடரில் தீவிரமாக விளையாடி வருகிறார். மும்பை அணியின் கேப்டனாக ரஹானேவுக்கு மோசமான சீசனாக அமைந்தாலும், மீண்டும் பேட்டிங் ஃபார்மை மீட்டெடுக்க போராடி வருகிறார். இந்த நிலையில் அசாம் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி களமிறங்கியது.

இதில் முதலில் பேட்டிங் ஆடிய அசாம் அணி வெறும் 84 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக 10.1 ஓவர்களை வீசிய ஷர்துல் தாக்கூர் 21 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி கம்பேக்கை கொடுத்துள்ளார். இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி 31 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது கேப்டன் ரஹானே களமிறங்கினார்.

ரஹானே – சிவம் துபே இருவரும் பேட்டிங் செய்து மும்பை அணியின் ஸ்கோரை உயர்த்தி கொண்டிருந்தனர். தேநீர் இடைவேளைக்கு முன் கடைசி ஓவரின் போது ரஹானே மிட் ஆன் திசையில் பந்தை தட்டிவிட்டு ரன்கள் ஓட முயன்ற போது, சிவம் துபே வேண்டாம் என்று மறுத்தார். அந்த நேரத்தில் ஃபீல்டிங் செய்த கேப்டன் தினிஷ் தாஸ், பந்தை ஸ்டம்பை நோக்கி எறிந்தார். அப்போது தவறுதலாக ரஹானே மீது பந்து அடித்து சென்றது.

இதையடுத்து ஃபீல்டிங் செய்யவிடாமல் தடுத்ததாக அசாம் வீரர்கள் கோரிக்கை வைக்க, ரஹானேவுக்கு அவுட் கொடுக்கப்பட்டது. தேநீர் இடைவேளைக்கு 2 பந்துகள் முன்னதாக ஆட்டமிழந்ததால், 2 பந்துகளுக்கு முன்பாக தேநீர் இடைவேளை விடப்பட்டது. பின்னர் களமிறங்கிய அசாம் அணி ரஹானேவின் முறையீடை திரும்ப பெறுவதாக நடுவரிடம் கூறியது. கிரிக்கெட் விதிகளின்படி, ஒரு வீரரின் விக்கெட்டை திரும்ப பெற வேண்டுமென்றால் அடுத்த பந்து வீசியிருக்க கூடாது.

இதனால் அதிர்ஷ்டவசமாக ரஹானேவுக்கு அவுட் கொடுக்கப்பட்ட பின் தேநீர் இடைவேளை விடப்பட்டதால், அடுத்த பந்து வீசப்படவில்லை. இதனால் ரஹானே மீண்டும் பேட்டிங் செய்ய அழைக்கப்பட்டார். இருப்பினும் அந்த வாய்ப்பை பயன்படுத்தாமல் 22 ரன்களிலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். இருப்பினும் ரஹானே மீண்டும் பேட்டிங் செய்ய அசாம் அணியின் செயல்பாடு ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *