அஸ்வின் தாய் கொடுத்த ஐடியா! சிறு வயதில் மூச்சு திணறல் இருந்தும் சாதித்தது எப்படி? தந்தை நெகிழ்ச்சி
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் சர்வதேச டெஸ்ட் போட்டியில் 500-வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார். இதன் மூலம் அதிவேகமாக 500 விக்கெட்டை வீழ்த்திய இலங்கை வீரர் முரளிதரனுக்கு பிறகு குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட் வீழ்த்திய வீரர் என பல பெருமைகளை அஸ்வின் படைத்திருக்கிறார். முத்தையா முரளிதரன் 87 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டிய நிலையில், அஸ்வின் 98 போட்டிகளில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
இந்த நிலையில் அஸ்வினின் தந்தை தன்னுடைய மகனின் இந்த சாதனை குறித்து பேசி இருக்கிறார். அதனை தற்போது பார்க்கலாம். அஸ்வினில் இந்த மைல்கல்லை, என்னால் மறக்கவே முடியாது. இந்த நிகழ்வை நான் நீண்ட காலமாக கனவு கண்டு வந்தேன். இந்த விக்கெட் என் வாழ்நாளில் கடைசி மூச்சு வரை நினைவில் இருக்கும்.
எனக்கு தற்போது அஸ்வினை நான் ஸ்கூட்டரில் ஸ்கூலுக்கு மற்றும் கிரிக்கெட் பயிற்சிக்கு அழைத்து சென்ற நாட்கள் தான் நினைவுக்கு வருகிறது. நான் அஸ்வினுக்கு செய்யும் பல விஷயங்கள் குறித்து அவர் புரிந்து கொண்டு உழைப்பை போட்டு தற்போது வெற்றி கண்டு இருக்கிறார். அஸ்வின் ஒரு கிரிக்கெட் பைத்தியம். எப்போதுமே வலைப்பயிற்சியில் பிஸியாகவே இருப்பார்.
அதே சமயம் நான் அஸ்வின் படிப்பையும் கைவிடக்கூடாது என்ற எண்ணத்தில் இருந்தேன். அஸ்வினுக்காக அவர்கள் நண்பர்களிடமிருந்து பாட குறிப்புகளை வாங்கி வந்து கொடுப்பேன். அஸ்வின் வீட்டுப்பாடத்தை எழுத வேண்டும் என்றால் கிரிக்கெட் போட்டியை டிவியில் பார்த்துக் கொண்டுதான் எழுதுவேன் என்று கூறுவார். அஸ்வினின் தாய் இசையில் விருப்பமுள்ளவர். இதனால் அஸ்வினை சிறுவயதில் இசை பயிற்சிக்கு அனுப்பினோம்.
ஆனால் அவர் விட்டுருப்பா என்ன! என்று ஓடி வந்து விட்டார். அதன் பிறகு கராத்தேவுக்கு சென்றார். இறுதியில் கிரிக்கெட் மீது அவருக்கு காதல் வந்தது. அஸ்வினுக்கு சிறுவயதில் இருந்து பல தடைகள் இருந்தது. அதையெல்லாம் தன்னுடைய முயற்சியின் மூலம் அவர் மீண்டும் வந்திருக்கிறார். சிறுவயதிலிருந்தே அஸ்வினுக்கு மூச்சுத் திணறல்( வீசிங்) பிரச்சனை இருந்தது. மேலும் அவருக்கு முட்டியில் சில சிக்கல் இருந்தது.
இந்த நிலையில் அஸ்வின் முதலில் வேக பந்துவீச்சாளராக தான் பயிற்சி எடுத்து வந்தார். அப்போது அஸ்வின் தாயும் எனது மனைவியும் மன சித்ரா தான் உனக்கு ஓடி வந்தால் தானே மூச்சு திணறுகிறது. நீ ஏன் இரண்டு ஸ்டெப் மட்டும் நடந்து வந்து சுழற் பந்துவீச்சை வீசக்கூடாது என்று கூறினார்.அதுதான் அஸ்வினின் வாழ்க்கையை மாற்றி இருக்கிறது. அஸ்வினின் பயிற்சியாளரும் இவனிடம் நிறைய திறமை இருக்கிறது. வீணடித்து விடாதே என்று அவருக்கு உற்சாகம் கொடுப்பார்.
அஸ்வின் தன்னுடைய இரண்டாவது ரஞ்சி சீசனில் விளையாடும் போது அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஆனால் அதிலிருந்தும் மீண்டு வந்து மெல்ல மெல்ல வளர்ந்து வந்தார். அஸ்வின் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை என்றால் எனக்கு எரிச்சல் ஆகிவிடும். ஆனால் அஸ்வின் தான் இதுக்கு ஏன் கவலைப்படுகிறீர்கள் என்று கூறி நானே ஜாலியா தானே இருக்கேன் என்று எங்களை உற்சாகப்படுத்துவார்.
அஸ்வின் நிறைய யோசிக்கிறார் என்று கூறுவார்கள். ஆனால் அது அப்படி கிடையாது. அஸ்வின் ஒரு புத்திசாலி எப்படி எப்படி முயற்சி செய்தால் விக்கெட் கிடைக்கும் என்று முடிவு எடுப்பார். உங்களுடைய இதயம் என்ன சொல்கிறதோ அதைக் கேளுங்கள். அப்படி இல்லை என்றால் உங்களால் முன்னேற முடியாது என்பது அஸ்வினின் வெற்றி ரகசியம். அஸ்வின் இது போன்ற மைல்கல்களை எப்போதுமே எதிர்பார்க்க மாட்டார். அவருக்கு 550 இல்லை 600 விக்கெட் எடுத்தாலும் இல்லை எடுக்கவிட்டாலும் பிரச்சனை இல்லை. 499 விக்கெட்டுகளில் நின்றிருந்தாலும் கூட அவர் மகிழ்ச்சியாக தான் இருந்திருப்பார் என்று அஸ்வினின் தந்தை ரவிச்சந்திரன் கூறியிருக்கிறார்.