எமர்ஜென்சி.. என்ன சொல்றீங்க.. ராஜ்கோட் டெஸ்டில் இருந்து அஸ்வின் விலகல்.. பிசிசிஐ பரபர அறிவிப்பு!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 445 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 131 ரன்களும், ஜடேஜா 112 ரன்களும் விளாசினர். இங்கிலாந்து அணி தரப்பில் மார்க் வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் சேர்த்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் கிராலியை 15 ரன்களில் வீழ்த்தியதன் மூலமாக தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500வது விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.

இதையடுத்து ரசிகர்கள் பலரும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து அஸ்வின் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ எமர்ஜென்சி காரணமாக உடனடியாக டெஸ்ட் அணியில் இருந்து விலகுகிறார்.

சவால் மிகுந்த இந்த நேரத்தில் பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகம் அஸ்வின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆதரவாக இருக்கும். இந்திய அணி வீரர்களின் குடும்பத்தினரின் நலன் மற்றும் ஆரோக்கியம் மிக முக்கியமானது. சவாலான இந்த நேரத்தில் வீரர்களின் தனியுரிமையை மதிக்க வேண்டும் என்று பிசிசிஐ தரப்பில் கோரிக்கை வைக்கிறோம். அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு பிசிசிஐ எப்போதும் தயாராக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500வது விக்கெட்டை வீழ்த்திய பின் செய்தியாளர்கள் சந்திப்பில் மகிழ்ச்சியுடன் காணப்பட்ட அஸ்வின் திடீரென விலகியிருப்பது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் அஸ்வினுக்கு பலரும் ஆறுதல் கூறி சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *