ஐடி துறை தான் இப்படின்னா.. ஷூ நிறுவனம் கூடவா..? 1600 ஊழியர்கள் கண்ணீர்..!!
உலகின் பிரபலமான ஸ்போர்ட்ஸ் ஷூ பிராண்டான நைக் வியாழனன்று அதன் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில் சுமார் 2% அதாவது 1,600 க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.
NIKE நிறுவனம் இந்த ஆண்டு மோமசான லாப அளவீடுகளை எதிர்கொள்ளும் என் கணிக்கப்பட்டு இருக்கும் காரணத்தால், முன்கூட்டியே நிதி நிலையைச் சரி செய்துகொள்ள இந்த ஸ்போர்ட்ஸ் வியர் நிறுவனமான நைக் தனது செலவின குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊழியர்கள் பணிநீக்கத்தை அறிவித்துள்ளது.
நைக் நிறுவனத்தைப் போலத் தனது சக உலகளாவிய பிராண்டுகளான அடிடாஸ், பூமா மற்றும் ஜேடி ஸ்போர்ட்ஸ் ஆகியவையும் இந்த ஆண்டு மோசமான லாபம் அளவீடுகளை எதிர்கொள்ளும் என எச்சரித்துள்ளன. சீனாவில் இருந்து பிற நாடுகளுக்கு உற்பத்தியை மாற்றியிருக்கும் வேளையில், பணவீக்கம் அதிகரித்ததோடு, பொருளாதார மந்த நிலையும் உருவாகியுள்ளது.
இதனால் இந்தியா, அமெரிக்கா மட்டும் அல்லாமல் உலக மக்கள் பெரும் பகுதியினர் அத்தியாவசியமற்ற செலவினங்களைக் குறைத்துள்ளனர். இதனால் புதிய ஷூ அறிமுகம் செய்தாலும், அதன் விற்பனை அதிகளவில் பாதிக்கப்படும். இதன் காரணமாகவே தற்போது காலணி நிறுவனங்கள் பணிநீக்க அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
டிசம்பர் மாதம் நைக் நிறுவனம் டுத்த மூன்று ஆண்டுகளில் $2 பில்லியன் சேமிப்புத் திட்டத்தை அறிவித்தது. இந்தச் சேமிப்பை சில தயாரிப்புகளின் விநியோகத்தை இறுக்குவது, அதன் விநியோகச் சங்கிலியை மேம்படுத்துவது, மேலாண்மை ஊழியர் அடுக்குகளைக் குறைத்தல் மற்றும் ஆட்டோமேஷனின் பயன்பாட்டை அதிகரிப்பது உள்ளிட்ட பல பணிகளை இதில் செய்ய உள்ளது.
மூன்றாம் காலாண்டில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வது மூலம் severance pay பிரிவில் சுமார் 400 மில்லியன் டாலர் முதல் 450 மில்லியன் டாலர் வரை செலவாகும் என்றும் நைக் நிறுவனம் அறிவித்திருந்தது. மே 31, 2023 நிலவரப்படி, நைக் நிறுவனத்தில் சுமார் 83,700 பணியாளர்கள் இருப்பதாக நைக் நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நைக் நிறுவன பணிநீக்க செய்தியை முதலில் வெளியுலகிற்கு அறிவித்த வால் ஸ்ட்ரீட் ஜேர்னல், இந்தப் பணிநீக்கம் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், நடப்பு காலாண்டின் இறுதியில் இரண்டாம் கட்டம் முடிவடையும் என்றும் கூறியது.
இந்தப் பணிநீக்கங்கள் நைக் பிராண்டின் ரீடைல் கடைகள் மற்றும் விநியோக மையங்களில் உள்ள ஊழியர்களையோ அல்லது அதன் கண்டுபிடிப்புக் குழுவில் உள்ளவர்களையோ பாதிக்காது, நிர்வாகப் பொறுப்பு அல்லது அலுவலகப் பணியில் இருப்பவர்களைப் பாதிக்க வாய்ப்பு உள்ளது என வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.