பேடிஎம்-க்கு வந்த குட்நியூஸ்.. மார்ச் 15 வரை ஆர்பிஐ கால நீட்டிப்பு..!!
இந்திய ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை பேடிஎம் பேமென்ட் வங்கியின் வாடிக்கையாளர்கள் பணத்தை டெபாசிட் செய்யவும், கடன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுவதற்கான காலக்கெடுவை மார்ச் 15 வரை நீட்டித்துள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது. இதற்கு முன்பு பிப்ரவரி 29 ஆம் தேதியை கடைசி நாளாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பேடிஎம் பேமென்ட் வங்கியை சுற்றி பல்வேறு நெருக்கடிகள் பாதித்து வரும் வேளையில் ஆர்பிஐ முடிவு, சுட்டெரிக்கும் வெளியிலில் மழை பெய்தது போல் உள்ளது. ஆனாலும் இதன் மூலம் நிரந்தரத் தீர்வு கிடைத்துள்ளதா என்றால் இல்லை, வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வெளியேறுவதும் நடக்கிறது. இதேபோல் ஒழுங்குமுறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
மார்ச் 15, 2024க்குப் பிறகு பேடிஎம் வாடிக்கையாளர் கணக்குகள், ப்ரீபெய்டு கருவிகள், வாலெட், ஃபாஸ்டேக்கு, தேசிய மொபிலிட்டி கார்டுகள் போன்றவற்றில் டெபாசிட்கள் அல்லது கிரெடிட் பரிவர்த்தனைகள் அல்லது டாப் அப்கள் அனுமதிக்கப்படாது என ஆர்பிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் வட்டி, கேஷ்பேக், பார்ட்னர் வங்கிகளில் இருந்து ஸ்வீப் ஆகியவை எப்போது வேண்டுமானாலும் வரவு வைக்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சேர்த்து விளக்கம் கொடுத்துள்ளது.
RBI நடவடிக்கையைத் தொடர்ந்து, அமலாக்க துறை வியாழக்கிழமை மூத்த Paytm நிர்வாகிகளிடம் விசாரித்து, அவர்களிடம் இருந்து தேவையான ஆவணங்களைப் பெற்றதாகத் தகவல் வெளியானது. மேலும் அமலாக்க துறையின் கேள்விக்களுக்கும் Paytm நிர்வாக அதிகாரிகள் பதில் அளித்தனர்.
தற்போதைய நிலவரப்படி, எந்த முறைகேடும் கண்டறியப்படவில்லை, மேலும் சட்டத்தின் மீறல் கண்டறியப்பட்டால் மட்டுமே ஃபெமாவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று அமலாக்க துறை அதிகாரிகள் குறிப்பிட்டு உள்ளனர். மேலும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் Paytm மீது ஏற்கனவே விசாரணை சில காலமாக நடந்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.