Thillai Natarajar Temple: தில்லையில் ஆருத்ரா தரிசனம் சிறப்புகள்!

ஆருத்ரா தரிசனம் எனப்படும் திருவாதிரைத் திருவிழா,மார்கழி மாத சிறப்புகளில் முக்கியமான ஒன்றாகும். திருவாதிரை, சிவபெருமானின் நட்சத்திரம். இன்றய தினம், அவரது நடனக் காட்சியைக் கண்டு, அவரது அன்புக்கு பாத்திரமாவது ஆருத்ரா தரிசனம். நடராஜர் ஆனந்த நடனமாடி உலகின் அனைத்து இயக்கங்களுக்கும் ஆற்றலாக இருப்பவர். இம் மாதத்தில் திருவாதிரை நட்சத்திரமும்,பௌர்ணமி தினமும் இணையும் நாளில் ஆருத்ரா தரிசனம் நடக்கும்‌.

இந்நாளில் நடராஜருக்கு ஆறு விதமான சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படும். அதிக குளிர் மிகுந்துள்ள மார்கழி திருவாதிரை நன் நாளில், குளிரூட்டி வெப்பம் தணிக்கிறார்கள். உலக ஜீவராசி அனைத்திற்கும் அருள்பாலிக்கும் இந்த அபிஷேகத்தைக் கண்குளிரக் காணும் வைபவமே இன்று‌. இதை மார்கழி திருவாதிரை என்றும் அழைப்பர்.

நட்சத்திரங்களிலேயே, திருவோணமும், திருவாதிரை இரண்டு நட்சத்திரங்கள் மட்டுமே ‘திரு’ எனும் அடை மொழியைக் கொண்டது. ஆடலரசன், நடராஜருக்கு, திருவாதிரையை வைத்துத் தான், “ஆதிரையன்” என்ற பெயர் வந்தது. இவ்விழா 1500 ஆண்டுகள் பழமை கொண்டது‌. இவ்விழா பற்றி திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் தமது பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, இலங்கை போன்ற பல இடங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

“ஓரியன் வின்” கூட்டத்தில் காணப்படும் “பெட்டல் ஜூஸ்” எனும் செந்நிறப் பெரு நட்சத்திரமே, ஆதிரை. ஆதிரை, ஒரு சிகப்பு நட்சத்திரம் என்பதை உணர்ந்திருந்த நமது முன்னோர், “ஆதிரையான்” ஆகிய சிவபெருமானை, செம்போற்சோதி, பொன்னார் மேனியின் என அழைத்தனர். பூலோக கைலாசமான சிதம்பரத்தில், இன்று இவரை தரிசிப்பது வெகு விசேஷம்.

ஆரம்ப நாட்களில் இத்தலம் “திருமூலட்டநாதர் ஆலயம்” எனப்பட்டது. சிதம்பரம் “நடராஜர் கோவில்” என்றால்தான் இப்போது, அனைவர்க்கும் தெரியும். ஆடலரசர் வீற்றிருக்கும் இடம் “பொற்சபை”. இதனை, பொன்னம்பலம், கனகசபை, பொன்மன்றம் எனவும் அழைப்பர். இறைவன், தனது திரு நடனத்தை பதஞ்சலி முனிவர், வியாக்ரபாத முனிவர் ஆகியோர்க்குக் காட்டி அருளிய திருத்தலம். இங்கு, தனது இடது காலை ஊன்றி, வலது காலைத் தூக்கி “ஆனந்த தாண்டவம்” ஆடுகின்றார்‌.

கிருஷ்ண பகவானும்கூட, “நட்சத்திரங்களில் நான் திருவாதிரை”என்கிறார்.

இந்நன்நாளில், நடராஜருக்கு, நைவேத்யமாக “களி” செய்து படைப்பார்கள். களி என்றால் ஆனந்தம் என்று பொருளுண்டு. அஞ்ஞானம் அகன்று, மெய்ஞானம் தோன்றிய நிலையில் ஒரு ஆன்மாவானது, ஆனந்த நிலையிலிருக்கும். சத்-சித்-ஆனந்தம் எனும் தத்துவத்தை அடிப்படை கொண்டு அமைந்ததே திருவாதிரைக் களி நைவேத்யம் என்பார்கள்.

சிதம்பரம் நடராஜருக்கு சபாநாயகர் என்கிற பெயர் உண்டு. அனைத்துலக ஜீவன்களுக்குமான,பாவ, புண்ய,வினைகளுக்கேற்ப சரியான முறையில், மிக நியாயமான, தீர்ப்பினைக் கால நியதிப்படி, இடம், பொருள் அறிந்து தீர்வு வழங்குவதால் இந்தப் பெயர் என்பார்கள்.

“மண்ணாதி பூதமொடு

விண்ணாதி அண்டம் நீ”

எனத் தொடங்கி

“ஈசனே சிவகாமி நேசனே

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே” என முடியும் அற்புத பாடல் வரிகளைத் தந்தவர்.

சுமார் 320 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஐயா முனுசாமி என்பவரே. இதையே நடராஜர் பத்து என போற்றி ஞானம் தரக்கூடிய தேவார திருவாசக கருத்துகள் இதில் பொதிந்துள்ளதாகப் போற்றுவார்கள்.

அபார சிவபக்தி உடையவர், மத்யந்த முனிவரின் மகன் மாத்தியந்தனர். விடியற்போதில், பூஜைக்கு மலர் பறிக்க, கண்பார்வை அதிகமாக வேண்டியும், பூ பறிக்க மரக்கிளைகளில் ஏற, சவுகரியமான கால் விரல்கள் வேண்டியும், சிவனை வேண்டி, புலியின் கூர்மையான கண்களுடன், நீண்ட, நகங்களுடன் கால்களைப் பெற்றவர். வியாக்ரம் என்றால் புலி, பாதம் என்றால் கால், ஆக “வியாக்ர பாதர்” ஆயினர். இவரைப்” புலிக்கால்” முனிவரின் எனவும் அழைப்பர். தில்லை பெரும் தலத்தில் திரு நடனக் காட்சியைக் காணக் காத்துக் கிடப்பவர்.

பாற்கடலில் திருப்பள்ளி கொண்டுள்ள திருமால், நடராஜரின் திருநடனக் காட்சிகண்டு மகிழ, அதைக் கண்டு அவரைத் தாங்கி நின்ற ஆதிசேஷனுக்கும், அந்த ஆசை மனதில் தொடர்ந்து அலைபாய, திருமால் அவருக்கு வழிகாட்ட, சிவபெருமான் அவருக்குச் சொல்லியபடி, சிதம்பரத்தில் அவரது திரு நடனம் காண புலிக்கால் முனிவருடன், காத்திருக்க, இந்த இருவருக்கும், சிவபெருமான், தமது, திரு நடன காட்சியினை, நல்கிய தினமே, மார்கழி ஆதிரை பௌர்ணமியாகும்.

தோற்றம், அவதாரம், பிறப்பு, பற்ற முடியாத பரமசிவம், “சிந்து” எனும் பெயரும் கொண்டவர். அம்பரம் என்றால் ஆகாயம், சிந்து அம்பரம் என்பதே “சிதம்பரம் “என்றானது என கூறுவார்கள். தரிசித்தால் முக்தி தரும் தலம் இது. ஈசனின் திரு காட்சி பெற்ற மிகத் தூய்மை அடைந்த உயிர்கள், சிவத்துடன் கலந்து, சிவ மயமாகி, பின் ஆத்மாவில் கலந்து சிவம் ஆவதை “அத்வைதம்” என்பர். இந்த ஞான முக்தியை “சிவதத்வமசி”, “அஹம் பிரஸ்மாஸ்மி” என ஆன்மிகப் பெரியவர்கள் அழைப்பரர்கள்.

ஈசனின், இந்த, ஆருத்ரா தரிசனத்தின் போது, திரு நடனம் காண,தெய்வங்கள், தேவர்கள்,ரிஷி,முனிவர்,போன்ற பலரும் வந்திருந்தார்கள். பிரம்மாவானவர், ஈசனின் திருநடனத்திற்கு, கீதம் பாட, விஷ்ணு குழல் ஊத, ருத்ரன் மிருதங்கம் வாசிக்க, பராசக்தி வேதம் பாட, சரஸ்வதி தேவி வீணை வாசிக்க, லக்ஷ்மி தேவி தாளம் போட நந்திதேவர் குடமுழா இயக்க, ஈசனின் நடனக் காட்சி நடந்தது‌, இந்த நாளே ஆருத்ரா தரிசனம். இந்த அற்புதக் காட்சியைத் திருமந்திரம்,

“தேவரோடு ஆடித்

திரு அம்பலத்து ஆடி

மூவரோடு ஆடி

முனி சனத்தோடு ஆடி

பாவினுள் ஆடி

பராசக்தியில் ஆடி

கோவினுள் ஆடிடும்

கூத்த பிரானே!”

எனப் போற்றும்.

இன்றய ஆனந்த கூத்தின் காரணமாக ஈசனுக்கு “ஆதிரையன்” எனப் பெயர் வந்தது. சம்மந்தர் பெருமான், இவ்விழாவை,

“ஆதிரை நாள் காணாதே

போதியோ” எனக் கூறி சிறப்பிப்பார். கோவில் நன்மணிமாலை, இதனை

“செம்பொன் தில்லை மூதூர் அம்பலத்து ஆடும்

உம்பர் நாயகனே!” எனப் போற்றும்‌.பரிபாடலும், தேவாரமும் போற்றும் சிறப்பான விழா இது.

ஆனந்த நடனம் புரியும் பொன்னம்பலம், ஒரு அற்புத அமைப்பு. 64 கலைகளை காட்டும் இங்கு, 64 கை மரங்கள் உள்ளன. அனைத்துமே தெய்வீக அடிப்படையாக, உலகத்தின் உயிர்நாடியாக, விஞ்ஞான மையமாக, மனிதனின் வாழ்வாதாரமாக, மெய்ஞானப் பொருளாக, விளங்கி, தமிழகத்துக்கு பெருமை சேர்க்கின்றன. மத்யந்த முனிவர் “தவம் செய்ய சொர்க்கம் கிடைக்கும், மனம் ஒன்றிச் செய்யும் ஈசன் வழிபாடே மறு பிறவி ஏற்படாமல் தடுக்கும் ” என கூறுகிறார்.

கூத்தின், தாண்டவங்களின் வகைகளைப் பெரியதொரு பட்டியலிட்டுக்காட்டும் திருமந்திரம், “திரு அம்பல சக்கரத்தின் சிறப்பையும், மகிமையையும், தனியெரு அதிகாரத்தில் எடுத்துக் காட்டும்.

மாணிக்கவாசக பெருமானோ

“சித்தம் சிவமாக்கிச் செய்தவற்றைத் தவமாக்கும் அத்தன் ஆதலால்,எச்செயல் செயினும்,ஈசன் புகழ்பாடி, சிவநினைவோடு, செய்யவும்” என்பார்.

பெரும் பக்தன் நந்தனார், மனத்தூய்மையுடன், பக்தி சிரத்தையுடன், சமைத்து வழிபட்ட”களியை” ஏற்றுக் கொண்டு, அதையே ஈசன் தமக்கு நைவேத்யமாகக் கொண்டதால், அது “திருவாதிரைக்களி”எனப் பெயர் பெற்றது. அதை ஒரு வாயாவது உண்ண வேண்டும் இன்று என்பது ஐதீகமாயிற்று.

சுந்தரரின் வளர்ப்புத் தந்தையான நரசிங்க முனையர் எனும் மன்னர், இத்திரு நாளன்று, அன்னதானம் சிறப்பாகச் செய்து, அடியவர்களுக்கு, நூறு பொற்காசுகள் வீதம் கொடுத்துவருவதை ஒரு விரதமாகும் கொண்டவர் என்கிறது வரலாறு.

“வீழ்ச்சியில்லா நல்வாழ்வு அமைய, இன்று காட்சி தரும் கடவுளைக் காண்”

என ஆருத்ரா தரிசனம் பற்றிச் சொல்வார்கள். நரியைப் பரி ஆக்கிய ஈசன் திருவிளையாடல், நமக்கும் நடக்காத காரியத்தை நடத்திக் காட்டும் என்பர். இறைவன் நம்மைத் தேடி வந்து காட்சி கொடுக்கும் அற்புத நாளிது என்பார் மாணிக்க வாசகர்.

இன்றய தினம், அல்லது சிவனுக்கு உகந்த, திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த ஆண் பிள்ளைகளுக்கு, சிவசங்கரன், பரமசிவம், சர்வேஸ்வரன், சங்கரன், சிவநேசன், சிவப்பிரியன் போன்ற பெயர்களும், பெண் குழந்தைகளுக்கு சங்கரி, சிவசங்கரி,விசாலாட்சி, ஆதிரை, சிவகாமி, மீனாட்சி, காமாட்சி போன்ற பெயர்களை வைப்பார்கள். சிவனை வில்வ இலையால் அர்ச்சனை செய்ய, அசுவமேத யாகம் செய்த பலனுண்டு என்பர்.

அஸ்ஸாம் மாநிலம், நாகன் மாவட்டத்தில், பூரணிகுடம் எனும் இடத்தில் உள்ள, “மஹா மிருத்யுஞ்சை” கோவில் சிவலிங்கம்,126 அடி உயரமும்,56அடி சுற்றளவுங்கொண்ட ஒரு பிருமாண்டம். கீழ் பகுதியில் 5000 பக்தர்கள் அமர்ந்து,தியானம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கும், இன்று, விசேஷம் களை கட்டும். தமிழகத்தில் ஆவுடையார் கோவிலில், மரகதத்திலிருக்கிறார் நடராஜர். ஆருத்ரா தரிசனம் அன்று மட்டுமே, இவருக்கு அபிஷேகம் செய்வர்.பின்பு தீபாராதனை முடிந்து சந்தன காப்பு செய்வர். அடுத்த ஆருத்ரா தரிசனம் போது இந்த சந்தனக் காப்பு கலைக்கப்படும். ஆக,இன்று ஒருநாள் மட்டுமே இங்கு மரகத பச்சை நடராஜரை தரிசிக்க முடியும்.

“காதலாகிக் கசிந்துருகி கண்ணீர் மல்கி” வேண்டி நிற்கும் பக்தர்களுக்கு வேண்டியதை வழங்கும் விரிசடை வள்ளள் நாளிது.

மூலவரே வீதிஉலா வரும் ஆலயம் சிதம்பரம் மட்டுமே. நடராஜப் பெருமான் தேரில் பவனி வருவார். பஞ்சபூத தலங்களில் ஆகாயத் தலமாக இருப்பது இது. ஆருத்ரா தரிசனம் நிகழ்வதில் தனித்துவம் பெற்ற இரண்டு தலங்கள் சிதம்பரம் நடராஜர் கோவில், ஆதிசிவன் கோவில் என அழைக்கப்படும் திரு உத்திரகோச மங்கை கோவில்.

சிதம்பரத்தில் இவ்விழா, பிரம்மோற்சவமாகவே 10 நாட்கள் மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கேரளத்தில், சிவ-பார்வதி திருமண நாளாக இதைக் கொண்டாடுவர். பெண்கள் மகிழ்வுடன் கைதட்டிக் கொண்டே, சுற்றிவந்து நடனமாடுவர். இது “கை கொட்டிக் களி” எனப்படும். மன்மதன் எரிக்கப்பட்ட நாளான இன்று,சிவ-பார் வதி தேவி பெருமைகளை மொழியும்,”திருவாதிரா” பாட்டுக்கு ஆடப்படுகிறது என்பார்கள்.

“குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும்,

பனித்த சடையும்

பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்

இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும்

காணப்பெற்றால்

மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த

மாநிலத்தே!

எனும் அப்பர் சுவாமிகள் பாடியதன் பொருளணர்ந்து இன்று நடராஜப் பெருமானை தரிசித்து வழிபட்டு ,அவரின் ஆசிகளை பெற்றுக் குறை களைந்து வாழ்வோம்.

-கி.சுப்பிரமணியன்,
ஆன்மிக எழுத்தாளர்,
அடையார்,சென்னை.
தொடர்புக்கு: manivks47@gmail.com

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *