தினமும் புதினா சாப்பிடலாமா..? அப்படி சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா?
நம்முடைய உணவுகளில் பயன்படுத்தப்படும் பல பொருட்கள் நமக்கு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை அளிக்க கூடிய மருத்துவ குணங்களை கொண்டிருக்கின்றன. அந்த வகையில் பலரும் விரும்பி சாப்பிடும் புதினா நமது உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது.
குறிப்பாக புதினா இலைகள் அதன் புத்துணர்ச்சியூட்டும் நறுமணம் மற்றும் நல்ல சுவைக்காக பல உணவுகளில் கூடுதல் சேர்கையாக பயன்படுத்தப்படுகிறது. பலர் வாரத்திற்கு ஓரிரு முறை தங்கள் உணவில் புதினாவை சேர்த்து கொள்வார்கள். ஒரு சிலர் தங்கள் தினசரி டயட்டில் புதினாவை சேர்த்து கொள்வார்கள் உங்கள் அன்றாட உணவில் அதாவது தினமும் புதினாவை சேர்த்து கொண்டால் என்ன நடக்கும்? தினசரி உணவில் புதினாவை சேர்த்து கொள்வதால் கிடைக்கும் சாதகம் மற்றும் பாதகங்களை பற்றி பஞ்சாரா ஹில்ஸ் ஹைதராபாத் கேர் ஹாஸ்பிடல்ஸின் கிளினிக்கல் டயட்டீஷியனான ஜி சுஷ்மா கூறி இருக்கிறார்.
தினசரி எவ்வளவு புதினா எடுத்து கொள்வது பாதுகாப்பானது என்பதற்கு அனைவருக்கும் பொருந்த கூடிய பதில் இல்லை. சாலட்களில் பயன்படுத்தினாலும் சரி, டீ-யாக காய்ச்சப்பட்டாலும் சரி பெரும்பாலான மக்கள் மிதமான அளவு புதினாவை எடுத்து கொள்வது அவர்களுக்கு பாதுகாப்பானதாக இருப்பதாக உணர்கிறார்கள். அதே நேரம் மிதமான புதினா நுகர்வை தாண்டி அதிகம் எடுத்து கொள்வது சில நபர்களுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே எந்த ஒரு ஆரோக்கிய பொருட்களையும் மிதமாக சாப்பிட வேண்டும் என்பதை போலவே புதினாவையும் மிதமாக எடுத்து கொள்வது முக்கியமானது.
தினசரி புதினா எடுத்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்…
சிறந்த செரிமானத்திற்கு உதவுவதிலும், வயிறு சார்ந்த பிரச்சனைகளுக்கு நிவாரணம் கொடுப்பதிலும் புதினா பிரபலமாக உள்ளது. செரிமான பாதையின் தசைகளில் புதினா கொடுக்கும் ஆசுவாச விளைவு அஜீரணம் மற்றும் அசௌகரியம் உள்ளிட்ட சிக்கல்களுக்கு தீர்வு தரும்
புதினா இலைகளை நன்கு கழுவி சுத்தப்படுத்தி பச்சையாக அப்படியே சாப்பிட்டாலும் சரி, புதினா சேர்க்கப்பட்ட சூயிங்கம்-ஆக இருந்தாலும் சரி புதினாவின் இயற்கையான பண்புகள் நம்முடைய சுவாசத்தை புத்துணர்ச்சியூட்டுகிறது.
புதினாவில் நிறைந்திருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் உடலில் இருக்கும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை எதிர்த்துப் போராடுகிறது.
புதினா அளிக்கும் புத்துணர்ச்சியூட்டும் நறுமணம் நமது மூளையை தூண்டி விழிப்புணர்வு மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டையும் மேம்படுத்துவதாக கூறப்படுகிறது.
தினசரி புதினா எடுத்து கொள்வதால் ஏற்படும் சில பக்கவிளைவுகள்…
தினமும் புதினாவை எடுத்து கொள்வது சிலருக்கு நெஞ்செரிச்சலை ஏற்படுத்தலாம். புதினாவின் தினசரி நுகர்வு lower esophageal sphincter-ஐ ரிலாக்ஸ் செய்ய கூடும். இது ஆசிட் ரிஃப்ளக்ஸ் அறிகுறிகளை அதிகரிக்கும்.
புதினாவால் அலர்ஜி ஏற்படுவது பொதுவாக குறைவானது என்றாலும், சில நபர்களுக்கு ஸ்கின் ரியாக்ஷன்ஸ் அல்லது பிற அலர்ஜிக் அறிகுறிகள் ஏற்படலாம்.
GERD (Gastroesophageal Reflux Disease) உள்ள நபர்கள் அதிகப்படியான புதினா சாப்பிட்டால் மோசமான சில அறிகுறிகளை எதிர்கொள்ள நேரிடும்.
புதினாவை யார் தவிர்க்க வேண்டும்.?
குழந்தைகள் அல்லது மிகவும் மிகவும் சிறிய குழந்தைகளுக்கு புதினா என்பது மிகவும் ஸ்ட்ராங் உணவாக இருக்கலாம். எனவே குழந்தைகளுக்கு புதினா கொடுப்பதை கருத்தில் கொள்ளும் போது நிபுணரிடம் கலந்தாலோசித்து செயல்படுவது நல்லது. அதே போல ஏற்கனவே குறிப்பிட்டதை போலவே GERD சிக்கல் உடையவர்கள், தங்களுக்கு மோசமாக அறிகுறிகள் ஏற்படுவதை தவிர்க்க மிதமான புதினா நுகர்வை கவனத்தில் கொள்ள வேண்டும். புதினா அல்லது அதனுடன் தொடர்புடைய தாவரங்களுக்கு அலர்ஜி இருப்போர் கவனமாக இருக்க வேண்டும். புதினாவின் தாக்கம் ஒவ்வொரு நபருக்கும் வித்தியாசமாக இருக்கும். புதினாவை சேர்த்து கொள்வதில் உங்களுக்கு குறிப்பிட்ட உடல்நலக் கவலைகள் இருந்தால், தகுந்த ஆலோசனைக்கு உங்கள் மருத்துவர் சரியான உணவியல் நிபுணரை அணுகவும்.