‘அஜித் சாருடன் பைக் டூர்..!!’ – சிவகார்த்திகேயன் சொன்ன அந்த தகவல்!
பைக் ரைடு குறித்து அஜித் தன்னிடம் பேசியதாக கூறியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன், அவருடன் பைக் சுற்றுலா செல்ல ஆசையாக இருப்பதாக தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக உருவாகி வரும் அயலான் திரைப்படம் ஒரு வழியாக நிறைவு பெற்று அடுத்த மாதம் 12ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவுக்கு ஏலியன் கதையை அயலான் மூலம் படக் குழுவினர் கொண்டு வந்துள்ளனர். ஹாலிவுட்டில் ஏலியன் ஜேனரில் பல படங்கள் வந்திருந்தாலும் இதில் என்ன புதுமையை சொல்ல போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. படம் குறித்து புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அதன் தயாரிப்பாளர், தெலுங்கு சினிமாவுக்கு பாகுபலி எப்படி ஓர் அடையாளமாக இருக்கிறதோ, அதேபோன்று தமிழுக்கு அயலான் படம் இருக்கும் என்று கூறியுள்ளார்.
அவரது பேச்சை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும் நெட்டிசன்கள் சிலர் இந்த கருத்தை கிண்டல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அயலான் படம் குறித்த இன்டர்வியூ ஒன்றில் சிவகார்த்திகேயன் அஜித் குறித்தும் பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-
அஜித் சாரை நேரில் பார்த்தபோது, அவர் என்னிடம் சிவா நீங்க பைக் ரைடு போவீங்களா? என்று கேட்டார். அவரிடம் சார், பைக் ரைடு என்றால் எங்களுக்கு தெரிந்தது ஊருக்குள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு போவதுதான். உங்கள அளவுக்கு எங்களால் ஓட்ட முடியாது என்று சொன்னேன்.
அஜித் சார் எல்லா நாடுகளுக்கும் சென்று பைக்கில் சுற்றுப்பயணம் செல்கிறார். அங்குள்ள காட்சிகளை பைக்கிலேயே சென்று பார்க்கிறார். அந்த லெவலுக்கு நான் செல்வேன் என்று எனக்கு தெரியாது. ஆனால் ஆசை இருக்கிறது. இப்போது அஜித் சார் வைத்துள்ள பைக்கை போன்று ஒன்றை வாங்கிவிட்டு, அதை நன்றாக ஓட்ட கற்றுக்கொள்ள வேண்டும். அஜித் சார் வைத்திருப்பது சாதாரண பைக் அல்ல. அந்த பைக்கை ஓட்ட கற்றுக்கொண்டு, அவருடன் ஒருமுறை சுற்றுலா செல்ல வேண்டும் என ஆசையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.