தமிழகத்தில் 1000ஆண்டுகள் பழமையான தடுப்பணை கண்டுபிடிப்பு..!
பழனி அருகே உள்ள பொருத்தல் என்ற பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி தலைமையில் அண்மையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இதில், 1000ஆண்டுகள் பழமையான தடுப்பணை கண்டறியப்பட்டது.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது: சுருளி ஆறு, சண்முக நதியின்கிளை ஆறாகும். இதை சுள்ளியாறு என்றும் அழைக்கின்றனர். இந்த ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையில் பொருந்தல் ஆற்றுக்கு மேற்குப் பகுதியில் உற்பத்தியாகி, காட்டாறாக சிலகி.மீ. தொலைவு வடக்கு நோக்கிப்பாய்ந்து, பச்சையாற்றில் கலக்கிறது.இடையில் இந்த சுருளி ஆறு சுண்டக்காய்தட்டி கரட்டுக்கு கிழக்கே பாய்கிறது. அந்த இடத்தில் ஆற்றின் போக்கை மாற்றும் வகையில் தடுப்பணை கட்டியுள்ளனர்.
அணையின் சிதைந்து போன இடிபாடுகளை ஆராய்ந்தபோது இந்த விவரங்களை அறிய முடிந்தது. இந்தத் தடுப்பணையின் மூலம் இப்பகுதியில் உள்ள பெரும்பாலான விளைநிலங்கள் பாசன வசதியைப் பெற்று இருக்க வேண்டும். ஆற்றின் அருகே மூன்று குளங்கள் அடுத்தடுத்து அமைக்கப்பட்டுள்ளன. மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்படும்போது இந்தக் குளங்களை நிரப்பிய பிறகே மழைநீரானது சண்முகநதியில் கலக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
“இந்தத் தடுப்பணையின் மூலம் இப்பகுதியில் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் வேளாண்மை, பாசன தொழில்நுட்பங்கள் குறித்து பல்வேறு தகவல்களை அறிந்துகொள்ள முடிகிறது,” என ஆய்வாளர் நாராயணமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.