அதிமுகவில் இணைந்திருக்கும் நடிகை கௌதமிக்கு படிப்படியாக பல விஷயங்கள் தெரியவரும் : அண்ணாமலை சூசகம்..!
பாஜகவில் கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றியவர் நடிகை கெளதமி. எத்தனையோ கட்சிகளில் இருந்து அழைப்பு வந்தாலும் பாஜகவில் இருந்து விலகாமல் இருந்தார். பல தேர்தல் பொதுக்கூட்டங்களில் பாஜகவுக்காக ஊர் ஊராக சென்றும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதனிடையே, நரேந்திர மோடி பிரதமரான பிறகு அவர் மீது கொண்ட பற்றால், மேலும் தீவிரமாக கட்சிப் பணிகளில் அவர் ஈடுபட்டார்.
இதனிடையே, பாஜக நிர்வாகி ஒருவர் தனது நிலத்தை விற்று மோசடி செய்துவிட்டதாக புகார் அளித்தார். ஆனால் அதுதொடர்பாகவும் கட்சி தலைமை நடவடிக்கை எடுக்காததால் பாஜகவில் இருந்து விலகுவதாக கடந்த ஆண்டு அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமியை சந்தித்த கெளதமி, அதிமுகவில் இணைந்தார்.
இந்நிலையில், பாஜகவில் இருந்து கெளதமி விலகியது குறித்து அண்ணாமலையிடம் நிருபர்கள் இன்று கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “தேர்தல்கள் வரும் போது பலர் அந்தக் கட்சியில் இணைவார்கள். பலர் இந்தக் கட்சியில் இணைவார்கள். இதில் ஒன்றும் புதுசு கிடையாது. பேட்டியில் கெளதமி ஒன்று சொல்லி இருந்தார்கள். ராஜபாளையத்தில் தனது பாஜக சீட் கொடுக்கவில்லை என்று. இப்போது அவர் அதிமுகவில் இணைந்திருக்கிறார்.
ஆனால், ராஜபாளையம் தொகுதியை அதிமுக கேட்டும், பாஜக கொடுக்கவில்லை என்பதை கெளதமியிடம் எப்படி என்னால் சொல்ல முடியும்? சில விஷயங்களை நம்மால் வெளிப்படையாக சொல்ல முடியாது. இப்போது அதிமுகவில் இணைந்திருக்கிறார். அவருக்கே பல விஷயங்கள் படிப்படியாக தெரியவரும்” என அண்ணாமலை கூறினார்.