இன்று விரதமிருந்து ஆஞ்சநேயரை வழிபட்டால், சகல யோகங்களும் நமக்கு வந்து சேரும்..!
வீரத்தையும் ஞானத்தையும் தந்தருள்பவர் அனுமன் என்று போற்றுகிறது புராணம். அனுமன் வழிபாடு செய்யச் செய்ய, வலிமையும் உறுதியும்கொண்ட மனத்துடன் காரியமாற்றலாம். காரியம் அனைத்தையும் ஜெயமாக்கிக் கொடுப்பார் ஆஞ்சநேயர் என்கிறது ராமாயணம்.
சக்திக்கு உதாரணமாகத் திகழ்பவர் மட்டுமல்ல ஆஞ்சநேயர். பக்திக்கும் உதாரண புருஷராகத் திகழ்கிறார். பக்தியில் சிறந்தது அனும பக்தி என்பார்கள். ஸ்ரீராமபிரான் மீது, அத்தனை அன்பும் பக்தியும் கொண்டிருந்தவர். அதனால்தான் பல ஆலயங்களிலும் கைகூப்பிய நிலையில் சந்நிதி கொண்டிருக்கும் அனுமனைத் தரிசிக்கிறோம்.
எப்போதும் மனதில் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியையும் சீதா பிராட்டியையும் நெஞ்சில் வரித்திருப்பவர் என்று கம்பர் பெருமான் மிக அழகாக வர்ணித்துள்ளார். அனுமனை வழிபட்டால், ஸ்ரீராமரின் பேரருளையும் பெறலாம். அதேபோல், ஸ்ரீராமரை வழிபட்டால், அனுமனின் அகம் குளிர்ந்து அருளுவாராம்.
சனிக்கிழமை தோறும் விரதமிருந்து ஆஞ்சநேயரை வழிபட்டால், சகல யோகங்களும் நமக்கு வந்து சேரும். விரதமிருக்கும் நாட்களில் மிகச் சுத்தமாக இருக்க வேண்டும். அனுமனை முழுமையாகத் தியானித்து ஒருவேளை உணவு மட்டும் உண்டால், உன்னத பலன் கிடைக்கும்.
ஆஞ்சநேயருக்கு வடை மாலை அணிவத்து வழிபட்டால் தடைகள் அகலும். வெற்றிலை மாலையை அணிவிப்பவர்கள் தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப, தாராபலம் பெற்ற நாளில் அணிவித்தால் ஏராளமான நற்பலன்களை அடையலாம். அவல், பொரி, கடலை, கற்கண்டு, வாழைப்பழம் போன்றவை அனுமனுக்குரிய நைவேத்தியங்கள்.
ஆஞ்சநேயர் விரதத்தின் பலன்கள்:
• கணவன், மனைவி வாழ்வில் ஒற்றுமையாக இருப்பர்.
• பகை மாறி வெற்றி உண்டாகும்.
• தாய், தந்தை, அண்ணன், தம்பி உறவு பலம் பெறும்.
• ஆத்ம பலம், சம்பத் பலம் ஆகிய ஆறுவகையான பலன்களும் நிரந்தரமாகக் கிடைக்கப் பெறுவர்.
• குபேரனுக்கு இணையாக வாழ்வார்கள்.
• குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
• சகல வியாதிகளும் விலகும்.
• இறுதியில் மோட்சம் பெறலாம்.