கருங்காலி மாலையை எப்படி அணிந்தால் முழு பலனும் கிடைக்கும் ?

கருங்காலி மாலை தோஷங்களை நீக்கக் கூடியது என்பதால் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த மாலையை அணியலாம். கருங்காலி மாலையை அணிந்து கொள்வதால் மட்டுமல்ல கருங்காலி மரத்தின் நிழலில் அமர்ந்தாலும் கூட உடலில் உள்ள பலவிதமான நோய்களை தீர்க்கும் தன்மை கொண்டது. இது உடலையும், ஆன்மாவையும் பலம் அடைய செய்யக் கூடியதாகும்.

​கருங்காலி மாலை :

கருங்காலி மாலை பற்றிய இன்றைய கால கட்டத்தில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. இதை தற்போது பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். கழுத்தில் அணியும் மாலை, ஜப மாலை, கையில் பிரேஸ்லெட் ஆக பலரும் அணிந்து கொள்கிறார்கள். இன்னும் சிலர் வீட்டில் கருங்காலி குச்சியை வீட்டில் வைத்தும் வணங்கி வருகிறார்கள். செல்வத்தை ஈர்த்து, தீய சக்திகளை அகற்றி, பல விதமான நன்மைகளை தரக் கூடியது என்பதால் பலரும் கருங்காலி மாலைகளை தேடிச் சென்று வாங்கி, அணிந்து கொள்கிறார்கள். கருங்காலி மாலையை கடையில் இருந்து வாங்கியதும் அப்படியே அணிந்து கொண்டால் பலன் தராது. அதற்கான சரியான வழிமுறைகளை கடைபிடித்து, அதற்கு பிறகு அணிந்தால் மட்டுமே கருங்காலி மாலை முழு பலனையும் தரும்.

​கருங்காலி மாலை பயன்படுத்தும் முறை :

​கருங்காலி மாலை என்பது தெய்வீக தன்மை கொண்டதாகும். கோவிலில் இருக்கும் சிலையாக இருந்தாலும் அதற்கு உரிய அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள், மந்திர ஜபங்கள் செய்து, அதில் தெய்வத்தை ஆவாஹனம் செய்தால் மட்டுமே அதில் தெய்வீக தன்மை ஏற்பட்டு அனைவரும் வரும் கடவுளாக மாறும். அது போல கருங்காலி மாலையாக இருந்தாலும் அது தயார் செய்யப்பட்டு, நம்முடைய கைகளை வந்து அடைவதற்கு முன் பலரின் கைகளுக்கும் சென்று இருக்கும். இதனால் அதை தூய்மைப்படுத்தி, அதில் உள்ள தெய்வீக தன்மையை வெளிப்பட செய்தால் மட்டுமே அதன் முழு பலனையும் பெற முடியும்.

கருங்காலி மாலை சுத்தம் செய்யும் முறை :

கருங்காலி மாலை, செவ்வாய் பகவானின் ஆதிக்கம் நிறைந்தது என்பதால் செவ்வாய் கிரகத்திற்கு உரிய நாளான செவ்வாய்கிழமையில், செவ்வாய் ஹோரை நேரமான காலை 6 மணி முதல் 7 மணி வரையிலான நேரத்தில் இதை அணிவது சிறப்பு. அதற்கு முன்பாக முதல் நாள் இரவே சிறிது எண்ணெய் தேய்த்து, நீங்கள் வாங்கிய கருங்காலி மாலையை பூஜை அறையில் வைத்து விடுங்கள். மறுநாள் காலை எழுந்து, சுத்தமாக குளித்து விட்டு, ஒரு தட்டில் அந்த கருங்காலி மாலையை எடுத்து வைத்து முதலில் சுத்தமான தண்ணீரால் அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு சந்தனம், அரிசி மாவு, பால், அபிஷேகப் பொடி உள்ளிட்ட ஏதாவது ஐந்து பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு சுத்தமான தண்ணீரில் மீண்டும் அபிஷேகம் செய்து விட்டு, சுத்தமான துணியை கொண்டு துடைத்து வைத்து, சுவாமி படத்திற்கு முன் வைத்து விடுங்கள்.

​கருங்காலி மாலையை உரு ஏற்றும் முறை :

அபிஷேகம் செய்த கருங்காலி மாலைக்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் தொட்டு வைத்து உங்களின் குல தெய்வம் அல்லது இஷ்டம் தெய்வத்தை அதில் ஆவாஹனம் செய்ய வேண்டும். அதாவது அந்த மாலையில் உங்களின் இஷ்ட தெய்வம் அல்லது குல தெய்வம் இருப்பதாக நினைத்து, மனதார வேண்டிக் கொண்டு, வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் நைவேத்தியம் படைத்து, உங்களுக்கு தெரிந்த ஏதாவது ஒரு மந்திரத்தை 21 முறை அல்லது 108 முறை சொல்லி பிரார்த்தனை செய்ய வேண்டும். பிறகு அதற்கு தீபாராதனை, சாம்பிராணி காட்டி வழிபட்ட பிறகு, உங்களின் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வம் அல்லது முருகன் படம் அல்லது விக்ரஹம் இருந்தால் அதன் மீது இந்த மாலையை போட்டு வையுங்கள். வீட்டில் உள்ள பெரியவர்கள், குருமார்கள் யாரிடமாவது காலில் விழுந்து ஆசி பெற்று, அவர்கள் கைகளில் கொடுத்து வாங்கி, பிறகு கருங்காலி மாலையை கழுத்தில் அணிந்து கொள்ளுங்கள்.

​எப்போதெல்லாம் கருங்காலி மாலை அணிய கூடாது ?

அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால், அசைவம் சாப்பிடும் நாளில் கருங்காலி மாலையை கழற்றி, பூஜை அறையில் வைத்து விட்டு, அடுத்த நாள் குளித்து விட்டு சுத்தமான பிறகு மீண்டும் அணிந்து கொள்ளலாம். அதே போல் தீட்டு வீடு, துக்க காரியங்களுக்கு செல்வதாக இருந்தாலும் கருங்காலி மாலையை கழற்றி வைத்து விட வேண்டும். கிரகஸ்தர்களாக இருந்தால் இரவு தூங்க செல்வதற்கு முன் கருங்காலி மாலையை கழற்றி வைத்து விட வேண்டும். காலையில் குளித்த முடித்த பிறகு, மாலையை சுத்தம் செய்து விட்டு, மீண்டும் அணிந்து கொள்ளலாம். பெண்களாக இருந்தால் மாத விடாய் காலங்களின் போது கழற்றி வைத்து விட வேண்டும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *