தூத்துக்குடியில் ரூ.83 ஆயிரம் கோடி முதலீடு செய்த வியட்நாம் நிறுவனம்..விவரங்கள் இதோ

VinFast Auto நிறுவனத்தின் உரிமையாளரான பாம் நாட் வுயாங், வியட்நாம் நாட்டின் பணக்கார நபர்களில் முதலிடத்தில் உள்ளார். 2023-ம் ஆண்டு VinFast Auto நிறுவனம் பங்குச் சந்தையில் அறிமுகமானபோது, அன்று ஒரே நாளில் மட்டும் ரூ.3 லட்சம் கோடி வரை வருமானம் ஈட்டினார் பாம் நாட். இதனையடுத்து அவருக்குச் சொந்தமான VinFast Auto நிறுவனத்தின் பங்குகள் 255 சதவிகிதம் அளவிற்கு வளர்ச்சி கண்டன. இதனால் பாம் நாட் வுயாங்கின் சொத்து மதிப்பு 44.3 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவிற்கு உயர்ந்தது.

என்னடா திடீரென்று வியட்நாம் நிறுவனம் பற்றியெல்லாம் பேசுகிறோம் என நினைக்கிறீர்களா? அதற்கு காரணம் இருக்கிறது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் தமிழக அரசிற்கும் VinFast Auto நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலையை தொடங்க 2 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்யவுள்ளது VinFast Auto. முதற்கட்டமாக இந்த திட்டத்திற்கென 500 மில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்துள்ளது அந்நிறுவனம். இந்த ஆலையின் மூலம் 3,500 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் இங்கிருந்து வருடத்திற்கு 1,50,000 எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் விற்பனையை அதிகரிக்கும் பொறுட்டு விரிவாக்கப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது VinFast Auto நிறுவனம். இதற்காக வடக்கு கலிஃபோர்னியாவில் 2 பில்லியன் மதிப்பிலான ஆலையை கட்டி வருகிறது. அதுமட்டுமின்றி இந்தோனேசியாவிலும் ஆலை கட்டுவதற்கு திட்டமிட்டு வருகிறது.

2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட VinFast Auto நிறுவனம், இந்த வருடத்திற்குள் 45,000 முதல் 50,000 எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை இந்நிறுவனத்தின் 99 சதவிகித பங்குகள் பாம் நாட் வுயாங் கட்டுப்பாட்டில் உள்ளது.

1968-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி பிறந்த பாம் நாட் வுயாங், வியட்நாமின் முதல் கோடீஸ்வரர் ஆவார். இவரது தந்தை வியட்நாம் ராணுவத்தின் விமானப் பிரிவில் பணியாற்றியுள்ளார். தாயாரோ சொந்தமாக டீக்கடை நடத்தி வந்தார். வியட்நாமின் ஹனாய் ஊரில் பிறந்த வுயாங், 1985-ம் ஆண்டு கிம் லீன் மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை நிறைவு செய்தார்.

ரஷ்யாவில் தனது கல்லூரி படிப்பை நிறைவு செய்த வுயாங், திருமணத்திற்குப் பிறகு உக்ரைன் நாட்டிற்குச் சென்றார். இவருக்கு பாம் நாட் குயான் ஆன், பாம் நாட் மின் ஹோங் மற்றும் பாம் நாட் மின் ஆன் என மூன்று குழந்தைகள் உள்ளனர். அதில் பாம் நாட் குயான் ஆன் தற்போது Vinpearl நிறுவனத்தின் துணை இயக்குனராக உள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *